குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினர்.
முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு 2023 பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எனவே தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.
#group2exam என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் மூலம் எப்போது தேர்வு முடிவை வெளியிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில், வரும் ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொகுதி.II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும்,ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடத்த வேண்டியிருந்ததாலும், தொகுதி.II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி- II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது.
ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12- ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!