திட்டமிட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும்!

Published On:

| By Balaji

ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், ஜனவரி மாதம் நடைபெறவிருந்த 3 தேர்வுகள் மாற்று தேதிக்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை நாளை(இன்று) தெரிவிக்கவுள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மிகவும் கவலை அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று(ஜனவரி 6) காலை முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத செல்லும் தேர்வர்களுக்கு எந்த தடையும் இல்லை. அதற்குரிய ஹால்டிக்கெட் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை காண்பித்துவிட்டு தேர்வர்கள் செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டப்படி நடைபெறும். நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி 8ஆம் தேதி தேர்வு நடைபெறும். இதேபோல் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு ஜனவரி 9ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share