TNPL 2024: முதன்முறையாக கோப்பையை வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On:

| By Selvam

2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை 5 முதல் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவந்த லைகா கோவை கிங்ஸ் அணி, லீக் சுற்றில் விளையாடிய 7 போட்டிகளில் 6-இல் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே-ஆஃப்க்கு முன்னேறியது. இதை தொடர்ந்து, முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் 4வது இடம் பிடித்து பிளே-ஆஃப்க்கு முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ், எலிமினேட்டரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி, 2வது குவாலிஃபையர் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடிய இறுதிப் போட்டியில், முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, துவக்கத்தில் இருந்தே பந்துவீச்சில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெளிப்படுத்தியது. 3வது ஓவரில் முதல் விக்கெட், 6வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் என பவர்-பிளேவுக்குள் 3 விக்கெட்களை இழந்த லைகா கோவை கிங்ஸ் அணி, 6 ஓவர்களில் 50 ரன்கள் சேர்ந்திருந்தது.

பவர்-பிளேவை தொடர்ந்தும் சீரான இடைவேளைகளில் தொடர்ந்து விக்கெட்களை பறிகொடுத்த லைகா கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27 ரன்களும், அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும் சேர்த்தனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக, பி.விக்னேஷ், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியார் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

130 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கும் துவக்கம் மோசமாகவே அமைந்தது. 3 ஓவர்களிலேயே துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஃபெவிலியன் திரும்பினர்.

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித், அணியை விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டு, சீரான வேகத்தில் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்திரஜித் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அஸ்வின் அரைசதம் கடந்து 52 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த சரத் குமார் 15 பந்துகளில் 27 ரன்கள் விளாச, 19வது ஓவரிலேயே இலக்கை எட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தனது அபாரமான அரைசதத்திற்காக, ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

மறுபுறத்தில், பேட்டிங் செய்த 6 இன்னிங்ஸ்களில் 222 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 8 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றி, தொடர் முழுவதும் ஒரு ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாரூக் கான், ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

16 ஆண்டுகள் காத்திருப்பு… ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ‘ஜோகோவிக்’ வரலாறு!

ராகுல் காந்தி, கமலா ஹாரிஸ்: பிற்போக்கு தேசியம் கேட்கும் ஒற்றை அடையாளம்

டாப் 10 நியூஸ்: நெல்லை மேயர் தேர்தல் முதல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு வரை!

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்

Dindigul Dragons won the trophy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share