மின் வாரியத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கோபிநாத்திடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைமையகத்தில், டெண்டர் கொள்முதல் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய பல ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாகச் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக மின் வாரியம் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், 11 மாத காலமாக மின்சாரத் துறைத் தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்புப் பணியில் இருந்து கொண்டே ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது. தற்காலிக ஊழியரான கோபிநாத், ARM TECH நிறுவனத்தின் டீம் லீடராகப் பணியாற்றியுள்ளார். இவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவரிடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மின் வாரியத் தலைமை அலுவலகம் மட்டுமில்லாமல் மற்ற இடங்களிலும் அவர் ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
