”பெண்கள் ‘ஓசி’ பயணத்தை புறக்கணிக்க வேண்டும்” : பிரேமலதா

Published On:

| By christopher

ஓசி பயணம் வேண்டாம் என்று அந்த மூதாட்டி கூறியது போல தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் ஓசி பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக்டோபர் 2) விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.

ADVERTISEMENT

அப்போது விமான நிலையத்தில் இருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் திமுக அரசை கடுமையாக சாடினார்.

குறைவான அரசு பேருந்துகளே இயக்கம்!

ADVERTISEMENT

அவர் பேசுகையில் ”விழாக் காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத அளவு குறைவான அரசு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டால், ’தனியார் பேருந்துகள் லாப நோக்கத்திற்காக இயக்கப்படுபவை. ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை’ என்று கூறியுள்ளார். இப்படி கூற எதற்கு ஒரு அமைச்சர்?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

ஓசி பயணத்தை புறக்கணிக்க வேண்டுகோள்

தொடர்ந்து பேசிய அவர், “ஓசி டிக்கெட் வேண்டாம் என்று கூறிய மூதாட்டியை அதிமுகவினர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையானால் நன்றாக இருக்கும்.

இலவசப் பயணம் வேண்டாம் என்ற அந்த மூதாட்டியைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் இலவசப் பயணத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

அரசு பேருந்துகள் அமைச்சரின் சொந்த செலவிலா ஓடுகிறது? அது மக்களுடைய வரிப்பணம். அதில் தான் இந்த அரசு ஓடுகிறது.

எனவே, ஓசி டிக்கெட் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்” என்றார்.

உதயநிதி என்ன சொல்கிறார்?

தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசியது குறித்து,

”தேர்தலுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்று ஒற்றை செங்கல்லை எடுத்து வந்து உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் காட்டினார், தற்போது அவர் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஓசி டிக்கெட் விவகாரம் : போராட்டம் அறிவித்த எஸ்.பி.வேலுமணி

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எதிரொலி: எதிர்க்கட்சிகள் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share