பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை; ஓசி பஸ்ஸும் தேவையில்லை” – இயக்குநர் பேரரசு

Published On:

| By christopher

KNR மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.N.R.ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தப் படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவி வர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். படத் தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று (மார்ச் 23) மாலை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநருமான K.N.R.ராஜா பேசும்போது, “எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மதுவால் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்.” என்றார்.

சகோதரர் மரணம் தான் காரணம்

ADVERTISEMENT

இசையமைப்பாளர் ரவிவர்மா பேசும்போது, “இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக “சாராயம் அபாயம்” என்கிற பாடலை பாடலாசிரியர் ஆலயமணி எழுதி அவரே பாடியும் உள்ளார். இந்த படத்திற்கு நான் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளேன். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார்.

முதல் படத்தில் கமர்சியலாக சம்பாதிக்க நினைக்காமல் இப்படி ஒரு சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை தயாரிப்பாளர் ராஜா எடுத்துள்ளார் என்றால், அவரது சகோதரர் குறைந்த வயதிலேயே மதுவால் மரணம் அடைந்த தாக்கம்தான் அதற்கு காரணம். இது தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. பல காட்சிகளை டாஸ்மாக்கிலேயே நிஜமாக படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.” என்றார். 

அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன்

நாயகி விஜயலட்சுமி பேசும்போது, “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் எனக்குள் இருந்தது. என்னுடைய தந்தை தனி மனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர்.

சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்” என்றார்.

விஜயை விட குடிமகன் சூப்பரா ஆடுகிறான்

இயக்குநர் பேரரசு பேசும்போது,  “ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் என்றாலும் ஏற்றுக் கொள்ளும். அந்த வகையில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக நாம் ஆதரிப்போம்.

தற்போது தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதம்விதமாக தெருக்கூத்து நடனங்களை குடிப்பவர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவா இவர்களைவிட ஒரு குடிமகன் சூப்பரா ஆடுகிறான்.

கஞ்சா கடை ஆரம்பித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை

தமிழகத்தில் சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்துதான் ஓட்டு போட சொல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

இந்தப் படத்தில் கவிஞர் ஆலயமணி எழுதிய ‘சாராயம் அபாயம்’ என்கிற பாடல் ஒரு அபாய மணி. இந்தப் பாடலை டாஸ்மாக் முன்பாக ஒலிக்கவிட்டு மது ஒழிப்பு பிரச்சாரம்கூட செய்யலாம். மதுவிலக்கை ரத்து செய்வதாக கூறினால் ஓட்டுப் போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும்போது போதைப் பொருள்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றதால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல, கஞ்சா கடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆன்லைன் ரம்மி மூலமாக எங்கேயோ எப்போதோ ஒன்றிரண்டு பேர் இறக்கிறார்கள். ஆனால் குடியால் தினசரி எத்தனையோ பேர் உடல் பாதிப்பு, விபத்து என உயிர் இழக்கிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. சாராயம் விற்கும் காசில் அரசாங்கம் நடத்துவது கேவலம்.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை. ஓசி பஸ்ஸும் தேவையில்லை. நீட் தேர்வை நீங்கள் ஒழிக்கிறீர்களோ இல்லையோ, அதுவரை ஏழை மாணவர்களும் மருத்துவ படிக்க படிக்க வேண்டும் என்றால் ஏன் நீங்களே மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கக் கூடாது. சாராயம் விற்ற காசில் எதுவும் எங்களுக்கு பண்ண வேண்டாம். பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள்.

கேளிக்கை வரி என்பது கேலிக்கூத்து வரியாக மாறிவிட்டது. இந்த படம் சமுதாயத்துக்காக எடுக்கப்பட்ட படம். அனைவரும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

இராமானுஜம்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை! – சட்டமன்றத்தில் போட்டு உடைத்த கே.பி.முனுசாமி

பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share