வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற 30ஆம் தேதி காலை வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் இன்று (நவம்பர் 28) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரை இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக் கூடும்.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 30-ஆம் தேதி காலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்.
கரையைக்கடக்கும் போது பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ” என்றார்.
இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை ஆய்வு அறிக்கையின்படி, ” 28-11-2024: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
29-11-2024: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்வதற்கான ரெட் அலட்ர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-11-2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களுக்கு ரெட் அலர்ட், அதாவது மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
28-11-2024 முதல் 30-11-2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
28-11-2024 காலை முதல் மாலை வரை : சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 28- ஆம் தேதி மாலை முதல் 29- ஆம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-ஆம் தேதி காலை முதல் 30-ஆம் தேதி நண்பகல் வரை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி எப்போது கிடைக்கும்?” : எம்.பி. வில்சன் கேள்வி!