“வருஷக் கணக்கா காத்துக்கிட்டு இருக்கோம். தகுதித் தேர்வு (TET) பாஸ் பண்ணா வேலைனு சொன்னீங்க… இப்போ என்னடான்னா இன்னொரு எக்ஸாம் எழுத சொல்றீங்க?” – இதுதான் இன்றைய தேதியில் தமிழகம் முழுவதும் டெட் தேர்ச்சி பெற்று வேலைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களின் குமுறல்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2026ஆம் ஆண்டிற்கான திட்ட அட்டவணையை வெளியிட்ட சூடு தணிவதற்குள், அடுத்த சர்ச்சையும் கிளம்பியுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் (BT Assistant) மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் (BRTE) பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளன.
என்னதான் பிரச்னை? தற்போதுள்ள நடைமுறைப்படி, டெட் (TET) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலைக்குச் சேர வேண்டுமானால் ‘நியமனத் தேர்வு’ (Competitive Exam) என்ற மற்றொரு பரீட்சையை எழுத வேண்டும். இதைத்தான் ஆசிரியர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
“ஏற்கனவே ஒரு தகுதித் தேர்வை கஷ்டப்பட்டு எழுதி, சர்டிபிகேட் வாங்கி வைத்துள்ளோம். அதுல பாஸ் பண்ணவங்களை வெச்சுக்கிட்டு, திரும்பவும் இன்னொரு தேர்வு நடத்துறது எந்த விதத்துல நியாயம்?” என்று கேள்வி எழுப்புகிறது தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
வயசும் ஆச்சு… வாய்ப்பும் போச்சு: பலர் டெட் பாஸ் பண்ணி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 40, 50 வயதைத் தொடும் நிலையில், மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படித்துப் போட்டித் தேர்வு எழுதுவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று. இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சங்கங்களின் கோரிக்கை:
- நியமனத் தேர்வு ரத்து: பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- சீனியாரிட்டி முறை: பழைய முறைப்படி, பதிவு மூப்பு (Seniority) அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
- ஜி.ஓ 149: இந்த நியமனத் தேர்வை அமல்படுத்தும் அரசாணை 149-ஐ நீக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் மற்றும் பி.ஆர்.டி.இ (BRTE) காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், இனியும் காலம் தாழ்த்தினால் போராட்டம் வெடிக்கும் என்றும் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
சங்கங்கள் போராட்டம் நடத்துறது ஒரு பக்கம் இருந்தாலும், தேர்வர்கள் கொஞ்சம் உஷாரா இருங்க. அரசு ‘நியமனத் தேர்வு’ முடிவில் உறுதியாக இருந்தால், திடீர்னு நோட்டிபிகேஷன் வர வாய்ப்பிருக்கு. அதனால, ‘தேர்வு ரத்தாகும்’னு நம்பிக்கிட்டே முழுசா புத்தகத்தை மூடி வெச்சிடாதீங்க. போராடிக்கிட்டே, ஒரு கண்ணு சிலபஸ் மேலயும் இருக்கட்டும். எதற்கும் தயாராக இருப்பதே புத்திசாலித்தனம்!
