வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள், சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 20,000 ஆசிரியர்கள் 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்டவர்கள்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே 31-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் வழங்கப்படுகிறது.
அதாவது 2009-ம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட சுமார் 20,000 ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.
சமமான வேலை மற்றும் ஒரே விதமான பதவியை வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே வித்தியாசமான அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், 311-வது கோரிக்கையாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்சினை சரிசெய்யப்படும்,
பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பலமுறை இதை நினைவூட்டியும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்கிற காரணத்தால் வரும் 12-ம் தேதி முதல் சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் தேர்வுகள் நடைபெற உள்ள நேரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் திடீரென போராட்டம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பனீர் மக்கானி பாஸ்தா
இதுக்கு பேரு தான் மய்யம்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை இல்லாமல் சந்தோஷ் நடத்திய முக்கிய கூட்டம்… அதிரடி முடிவு!