திங்கட்கிழமை பள்ளி திறப்பு… மாணவர்கள் வரும் முன் இதைச் செய்யணும்! தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த 7 கட்டளைகள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn school reopening safety guidelines education department

தமிழகத்தில் வரும் ஜனவரி 5, 2026 (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

“மாணவர்களின் பாதுகாப்பிலும், உடல்நலத்திலும் எந்தச் சமரசமும் கூடாது” என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEOs) மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

கல்வித்துறை வெளியிட்ட 7 முக்கிய வழிகாட்டுதல்கள்:

பள்ளிகள் திறக்கப்படும் நாளில் (ஜனவரி 5) மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறையில் அமர்வதை உறுதி செய்யக் கீழ்க்கண்ட பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்:

ADVERTISEMENT
  • மின் இணைப்புகள் ஆய்வு: தொடர் மழையால் சுவர்கள் ஈரமாகியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகள், சுவிட்ச் போர்டுகள் (Switch Boards) மற்றும் வயர்களில் ஏதேனும் மின்கசிவு உள்ளதா என்பதைத் திறமையான எலக்ட்ரீஷியனைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
  • கட்டிட உறுதித்தன்மை: பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் மழையினால் பலவீனமாகி உள்ளனவா என்று சோதிக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் அல்லது சுற்றுச்சுவர் பகுதிகளுக்கு மாணவர்கள் செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
  • சுத்தமான குடிநீர்: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (Overhead Tanks) மற்றும் தரைமட்டத் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டுச் சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சிய, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • வளாகத் தூய்மை: பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். புதர்கள் மண்டிக்கிடந்தால் அவற்றை வெட்டிச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • டெங்கு தடுப்பு: டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும்.
  • கழிவறைப் பராமரிப்பு: கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டுச் சுத்தம் செய்வது அவசியம்.
  • சத்துணவு மையம்: சத்துணவு கூடங்கள் மற்றும் சமையல் அறைகளில் மழைநீர் கசிவு உள்ளதா என்பதைச் சமையலர்கள் உறுதி செய்த பிறகே சமையல் செய்யத் தொடங்க வேண்டும்.

பெற்றோர்களே… பள்ளி திறக்கும் முதல் நாள் என்பதால், உங்கள் குழந்தைகளிடம் சில விஷயங்களைச் சொல்லி அனுப்புங்கள்.

  • பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களுக்கு விளையாடச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்.
  • சுவிட்ச் போர்டுகள் அல்லது அறுந்து கிடக்கும் வயர்களைத் தொடக் கூடாது என்று எச்சரியுங்கள்.
  • முடிந்தவரை வீட்டிலிருந்தே காய்ச்சிய குடிநீரை ஒரு பாட்டிலில் கொடுத்து அனுப்புவது பாதுகாப்பானது. உடல்நலக்குறைவு இருந்தால், மருத்துவரை அணுகிய பின் பள்ளிக்கு அனுப்புங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share