தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலுக்கு (TN Rajya Sabha Bye-Election) இன்று ஜூன் 1-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேரின் மாநிலங்களவை பதவி காலம் (ராஜ்யசபா) இம்மாதம் நிறைவடைகிறது.
- ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில்- 12
- ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில்- 6
- ஜார்க்கண்ட்டில் – 2
- மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம்- 4
என மொத்தம் 24 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 18-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தின் இடைத் தேர்தல் ஏன்?
மேலும் தமிழக ராஜ்யசபா எம்.பி.யான அதிமுகவின் சிவி சண்முகம், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வென்றுள்ளார். இதனால் தமது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். சிவி சண்முகம் ராஜினாமா செய்த 1 மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கான இடைத் தேர்தலும் ஜூன் 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. ஜூன் 8-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். ஜூன் 18-ந் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.
நாடாளுமன்றத்துக்குள் நுழையும் தவெக (TVK)
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் தவெகவின் வேட்பாளரே வெற்றி பெறும் நிலை உள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குள் நுழைய இருக்கிறது.









