தமிழகம், புதுவை, கேரளா தேர்தல்: டிச. 15 முதல் விருப்ப மனு வாங்கும் அதிமுக

Published On:

| By Mathi

2026 Election AIADMK

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வரும் 15-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. தற்போதைய நிலையில் தமாகா தவிர வேறு முக்கிய கட்சிகள் பாஜக- அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை.

ADVERTISEMENT

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், “பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகதான் தலைமை.. இதனை ஏற்றுக் கொண்டு வரும் கட்சிகளுக்கே கூட்டணியில் இடம்.. இக்கூட்டணியில் எந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது” என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில். “தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், தலைமை கழகத்தில் 15.12.2025 திங்கட்கிழமை முதல் 23.12.2025 வரை – செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், முதல் நாளான 15.12.2025 அன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்துக்குள் தலைமை கழகத்தில் வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share