சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு பிரச்சனை உள்ள சூழலில் சில இடங்களில் வேண்டும் என்றே ஃபியூஸ் கேரியரை எடுத்துச் செல்கின்றனர் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டுப் பிரச்சனை பூதாகரமாகி உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டுப் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இதனால் அவ்வப்போது பொதுமக்கள் இரவு நேரங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல இடங்களில் மக்கள் சாலைகளை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மின்வாரியத் துறைக்கு 15,000 ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டியுள்ளது. 15 வருடங்களாகக் காத்திருந்தவர்கள் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைச் சரிசெய்யக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வேண்டுமென்றே சிலர் ஃபியூஸ் கேரியரை எடுத்துச் செல்கின்றனர். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு 40 நிமிடங்களில் சரி செய்யப்படுகிறது. அமைச்சராகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் 14 ஃபியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகப் புழல் பகுதியைச் சேர்ந்த வினித், தினேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
