பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டது. tn political leaders welcome pollachi case verdict
இதனை கட்சி பேதமின்றி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மனதார வரவேற்று, நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.
குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்.
விசிக தலைவர் திருமாவளவன் :
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து. விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு 9 பேரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு ஆறுதலை தருவதாக இருக்கிறது.
இந்தியாவில் இப்படி ஒரு கூட்டு பாலியல் குற்றம் நடந்திருக்காது என்ற அளவிற்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்தது. சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப் பாலியலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.
தவெக தலைவர் விஜய் :
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்வித சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் :
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதிகிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதிதான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாததுதான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் :
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உலகமே பாராட்டக்கூடிய ஒரு அதிரடி தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து இருப்பதைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.
அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பைக் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது. கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தேமுதிக சார்பாக வரவேற்கிறோம்.
தமாக தலைவர் ஜி.கே.வாசன் :
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை செயல் மிருகத்தனமானது. தமிழகத்தையே தலைக்குனிய வைத்த சம்பவம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் இழப்பீடு அறிவித்து இருப்பதையும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கியிருப்பதையும் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் :
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் :
2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததும் துவக்க கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தாமதத்தையும், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உருவாக்கி இருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பெரும் வீச்சோடு நடந்த பின்னரே 16 மாத காலத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 9 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து இருக்கிறார்.
அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவரும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர். இந்த தீர்ப்பு பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதுமாகும். இந்த வழக்குகளில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் :
கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்தாக்குதல் மத்திய புலனாய்வு துறை விசாரணை அதிகாரியின் விசாரணையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற விசாரணையில் நிலைநாட்டி, குற்றத்தை உறுதி செய்த முறை பாராட்டத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, குற்றவாளிகளின் மனிதத் தன்மையற்ற ஈனச் செயலை நீதிமன்றத்தில் நிலைநாட்டியதை போற்றிப் பாராட்டுகிறோம்.
குற்றவாளிகள் மீது முன்வைக்கப்பட்ட 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றங்களை உறுதி செய்து, நிலைநாட்டிய விசாரணை அதிகாரிகள், சாட்சியளித்தவர்கள், இவைகளை தக்க முறையில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, குற்றங்களை நிரூபித்த மத்திய புலனாய்வு துறை வழக்கறிஞர் ஆகியோருக்கு நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்.
பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருப்பது, போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் :
பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.
பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.
நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை :
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல், துணிச்சலாகப் போராடி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தந்துள்ள பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும், இந்தத் தீர்ப்பு ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று நம்புகிறேன்.
இந்த வழக்கில் நியாயம் கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிரான வழக்குகளில், தாமதமின்றிச் செயல்படவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.