தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சி நடக்கிறது; ஆகையால் இதுபற்றி நாடாளுமன்ற இரு சபைகளின் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என தமிழக எம்.பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கொடுத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், தமிழகத்தில் ஒரு கும்பல் கலவரத்தை தூண்ட முயற்சிப்பது மற்றும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிப்பது பற்றி விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கொடுத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், அமைதியான தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க திருப்பரங்குன்றத்தில் மதவாத சக்திகள் தமது அரசியல் நலன்களுக்காக பதற்றத்தை, வன்முறையை, கலவரத்தை தூண்டுவதை அவசரமாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி கொடுத்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், பிரிவினை மற்றும் மத மோதலை தூண்டும் வகையில் சில கும்பல் தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சிபிஎம் எம்.பி சச்சிதானந்தம் இதேபோல மக்களவையில் விவாதம் நடத்த கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மதிமுக எம்பி துரை வைகோ, “திருப்பரங்குன்றம் மலையில் கோயிலுக்கும் தர்காவுக்கும் இடையே நிலவிய பிரச்சனை, 1996 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தீர்வு காணப்பட்டு, வழங்கப்பட்ட தீர்ப்புகளின்படி தீபம் ஏற்றும் சடங்கு நீதிமன்றம் நிர்ணயித்த இடத்திலேயே எவ்வித இடையூறும் இன்றி நடைபெற்று வருகிறது. மேலும், பல ஆண்டுகளாக அமைதியோடு இரு தரப்பு பக்தர்களும் தங்கள் வழிப்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில், சமீபத்தில் சில மதவாத சக்திகள் மதுரைக் கிளையை அணுகி, தர்காவுக்கு மிக அருகில் புதிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி பெற்றுள்ளனர். வழக்கமாக பல ஆண்டுகளாக தீபத்தூணில் ஏற்றப்பட்டு வந்த தீபத்தை, தர்காவுக்கு அருகில் ஏற்றுவது என்பது வெறுமனே சடங்கு மாற்றம் அல்ல; அது திட்டமிட்டு சமய நல்லிணக்கத்தை, சமூக அமைதியைச் சீர்குலைக்கும், அரசியல் ஆதாயத்துக்காக வன்முறையைத் தூண்டும் முயற்சியாகும” என குறிப்பிட்டு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
