“மின்வெட்டுக்கு காரணமான அதிகாரியை கன்னியாகுமரிக்கு மாற்றிவிடுவேன்” – அமைச்சர் ரஞ்சித்குமார்.

Published On:

| By Pandeeswari Gurusamy

Ranjith

மின்வெட்டுப் பிரச்சினைக்குக் காரணமான மின்வாரிய அதிகாரியை, உடனடியாகக் கன்னியாகுமரிக்கு இடமாற்றம் செய்துவிடுவேன் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் அங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் நரப்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற அமைச்சர் ரஞ்சித்குமாரிடம், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, உடனடியாகத் தனது வாகனத்தில் இருந்தபடியே மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் அமைச்சர் தொலைபேசியில் பேசினார். அதுதொடர்பான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆடியோ உரையாடல் விபரம்:

அமைச்சரிடம் பேசிய நபர், “பரந்தூர் பகுதியில் மின்சாரக் கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் தொடர்ந்து அலைந்து வேலை செய்து வருகிறேன். ஆனால், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் (EE) பாண்டியராஜன் என்பவர் பணிக்கு வருவதே இல்லை. வேண்டுமென்றே மின்சாரத்தை ‘ஆஃப்’ செய்து விடுகிறார்கள். காலையில் நிலைமை சீராக இருப்பதாகக் கூறிவிட்டு, இரவில் கேட்டால் மின்சாரம் இல்லை என்கிறார்கள். தாம்பரத்தில் வசிக்கும் அவர், மதியம் 12 மணிக்கு வந்துவிட்டு மாலை 5 மணிக்கே கிளம்பி விடுகிறார். உயரதிகாரிகளால்கூட இவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று புகாரளித்தார்.

ADVERTISEMENT

அமைச்சரின் அதிரடி எச்சரிக்கை:

புகாரைக் கேட்டறிந்த அமைச்சர், “அவர் திமுகவைச் சேர்ந்தவரா?” என்று கேட்டுவிட்டு, “அவர் மீது நாளைக்கே இடமாற்ற நடவடிக்கை எடுக்கிறேன். உடனடியாகப் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால், அவரை நாளைக்கே கன்னியாகுமரிக்குத் தூக்கியடித்து விடுவேன்” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேசிய அமைச்சர், “உங்கள் கஷ்டங்களை நான் புரிந்து கொண்டேன். எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன்” என்று கூறிச் சென்றார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share