வேளாண் பட்ஜெட்… விவசாயிகளுக்கு ஏற்றமா? ஏமாற்றமா? – தலைவர்கள் ரியாக்சன்!

Published On:

| By christopher

tn leaders reaction on agri budget 25-26

தமிழக சட்டமன்றத்தில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேளாண் தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார். tn leaders reaction on agri budget 25-26

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி முதல் பல்வேறு கட்சித் தலைவர்களும் வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் tn leaders reaction on agri budget 25-26

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, முதல்வரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள், புதிய தொழில்நுட்பங்கள், சிறு, குறு விவசாயிகள் நலன், மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் மொத்தம் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் என்பது போலியானது. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரமாக வாசித்துள்ளனர். வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே திமுகவின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது. இதில் விவசாயிகளுக்கு நன்மை என்று எதுவும் இல்லை. tn leaders reaction on agri budget 25-26

வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று ஒரு வேளாண் பட்ஜெட்டை அறிவித்து உள்ளனர். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் புதிதாக ஏதுமில்லை. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதனையும் இந்த அரசு கைவிட்டுள்ளது.

நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அரசு நிறைய கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது தான் திமுக அரசின் சாதனை. நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது? கடன் வாங்குவதில் திமுக அரசு சாதனை செய்துள்ளது. தமிழக அரசு கடனில் மூழ்கி உள்ளது என்ற அவலநிலையை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை

எந்த அறிவிப்பை பாராட்டுவது எனும் அளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது வேளாண் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் உள்ளது.

முதன் முதலில் காப்பீடு திட்டம், மரபுசார் விதைகள், மின்சார இணைப்புகள் கூடுதலாக வழங்குதல், காடுகளை சமன் செய்து வேளாண்மை நிலங்களாக செம்மைப்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்கள். எதனோடும் ஒப்பிட முடியாத நிகரற்ற வேளாண்மை நிதி நிலை அறிக்கை என்றே இதை சொல்லலாம்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை tn leaders reaction on agri budget 25-26

கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டின்படி, தமிழகத்தில் 2022 – 2023 ஆம் ஆண்டில், மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர். இந்த ஆண்டு பட்ஜெட்டின்படி, சாகுபடிப் பரப்பு 151 லட்சம் ஏக்கர்தான் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் அமைச்சர்?

திமுக நிதியமைச்சருக்கு கூவம், அடையாறு சீரமைத்தல் எப்படியோ, அப்படியே, திமுக விவசாயத் துறை அமைச்சருக்கு கால்வாய்கள் புனரமைத்தல். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நிதி ஒதுக்குவார்கள். பருவமழை வரும் முன்பே, கால்வாய்கள் தூர்வாரக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதன்பிறகு, மழை வெள்ளம் போக வழியின்றி விவசாய நிலங்கள் வெள்ளக்காடானதும், மத்திய அரசு தரும் நிவாரண நிதியை, தங்கள் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்கள். கால்வாய்களை தூர்வாரக் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 3,581 கோடி. இந்த ஆண்டு ரூ. 3,954 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, காவிரி டெல்டா கால்வாய்களைத் தூர் வார கடந்த ஆண்டு ரூ. 110 கோடியும், இந்த ஆண்டு ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?

கடந்த ஆண்டு கூறிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆண்டு கூறப்பட்டுள்ளவையும் பெயரளவுக்கு இருக்கின்றனவே தவிர, நடைமுறைக்குச் சற்றும் சாத்தியமில்லாதவை. முதலமைச்சரின் விளம்பர ஆசைக்காக, ஆண்டுதோறும் ஒரு வேளாண் பட்ஜெட் அறிவிப்பதனால் விவசாயிகளுக்கு என்ன பயன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

கடந்த ஆண்டு (2024-25) 1.81 லட்சம் பாசனக் கிணறுகளுக்கு மின் இணைப்பு பெற்றுள்ள விபரத்தை கூறும் அறிக்கை, உடனடியாக மின் இணைப்பு வழங்க முடியாத 1,000 விவசாய கிணறுகளுக்கு சூரிய மின்சக்தி மின் மோட்டர் அமைத்து தருவதற்கு நிதியொதுக்கம் செய்துள்ளது. சிறு தானிய இயக்கம், எண்ணெய் வித்துக்கள் இயக்கம் போன்றவைகளுடன் முந்திரி வாரியம் அமைத்திருப்பதும், மானாவாரி பகுதிகளில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு தலா ரூ.2,000 மானியம் வழங்குவது. பண்ணைக் குட்டைகள் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

உணவுப் பொருட்கள் விளையும் வயலில் இருந்து – நுகர்வோர் இல்லங்களுக்கு செல்லும் வகையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதனை மேலும் விரிவுபடுத்த இணைய வழி கேட்பு மூலம் நுகர்வோர் வீடுகளுக்கு வழங்கும் புதிய திட்டம் உழவர் சந்தை வணிகத்தை வலுப்படுத்தும். வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆய்வு திட்டம் பொருத்தமானது.

சாகுபடி வேலைகள் எந்திரமயமாகி வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விவசாயப் பணிக்கான எந்திர மையங்கள் அமைப்பது. எந்திரங்கள் வாங்க மானியம் வழங்குவது, ஆயிரம் மையங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மய்யங்கள் அமைப்பது போன்றவைகள் சாகுபடி பணிகள் சுணக்கமில்லாது நடைபெற உதவும்.

கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன்

“கரும்பிற்கு 49 ரூபாய் கொடுத்து டன்னுக்கு 3500 கிடைக்கும் வகையில் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் டன் ஒன்றுக்கு ரூ.4500 கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்த சூழலில் டன் ஒன்றுக்கு ரூ.4000 ஆக கொடுக்க அரசு முன் வரவேண்டும். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சல் அதிகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன்.

அதேபோல இயற்கையை விவசாயம், சிறுதானிய உற்பத்தி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறேன். சூரிய சக்தி பம்பு செட்டுகள் மானிய விலையில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன். உழவர் சந்தைகளில் இருந்து காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. வேளாண்மைக்கு இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

உழவுத் தொழில் வேறு தொழில் புரிபவர்களுக்கு எல்லாம் உணவளித்துத் தாங்குவதால் உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட அச்சாணி போன்றவர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அவர்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது உழவர்கள் மத்தியில் மிகப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகள் பின்பற்றிய அதே பட்டியல், அதே வாசகங்கள் மறு வாசிப்பாக பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டுள்ளது.

7 இடங்களில் விதை சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடங்க இருப்பதாகவும், ரூ.250 கோடி விதை உற்பத்திக்காக செலவிட இருப்பதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். சொட்டுநீர் பாசனத்துக்கு 1168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதையும் வரவேற்கிறோம். அறிவிப்புகள் வாசிக்கப்படுகிறதே தவிர, அதற்கான தொகை விடுவிக்கப்படாததால் கடந்த 4 ஆண்டுகளாக வேளாண் பட்ஜெட்டால் பயன்பெற முடியாத நிலை உள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க 5 ஆயிரம் இயந்திரங்கள் தருவதற்கான அறிவிப்பை வரவேற்கிறோம். இந்த அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும். 2925 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வார போவதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த திட்ட அறிவிப்புக்கும், தூர்வாருவதற்கு ஒதுக்கப்படும் நிதியும் எந்த வகையிலும் பொருத்தமில்லாமல் உள்ளது.

கொள்முதல் உத்தரவாதம் இருந்ததால்தான் நெல்லுக்கான உற்பத்தி திறன் அதிகரித்தது. நடப்பாண்டு கொள்முதலை தனியாருக்கு தாரைவார்த்ததால் இனி நெல் உற்பத்தியும் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தது. 4 ஆண்டுகள் கடந்தும் இதை செயல்படுத்தவில்லை.

விளம்பர பட்ஜெட்டாக, காகித பட்ஜெட்டாக உள்ளதே தவிர, வாசிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விவசாய வளர்ச்சிக்கோ, மேம்பாட்டுக்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏமாற்றுகிற பட்ஜெட்டாக விவசாயிகளுக்கு அமைந்துள்ளன. இயற்கை வளங்கள் அழிப்பால் வனவிலங்குகள் விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் புகுந்து சேதப்படுத்துகின்றன. இவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

.”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share