பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று (ஏப்ரல் 4) தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களான தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், கடலூரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம் உள்ளிட்ட 20 இடங்களிலும், அரியலூரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனையறிந்த காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, “புதிய நிலக்கரி சுரங்கத்திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் எனவும், பாதுகாப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால், நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி தரப்படாது.” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருவாரூருக்கு வந்திருந்தார்.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் நாளை அறிவிப்பு வெளியிடுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
