இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையிசை பயணத்தை பாராட்டும் விதமாக, ஜுன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். tn govt take function for ilaiyaraaja
இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை இசைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் இன்று (மார்ச் 27) கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ”நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா வரும் ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும்” என்று அறிவித்தார்.
முன்னதாக லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்துக்கு பிறகு சென்னை திரும்பிய தனக்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த 13ஆம் தேதி நேரில் சென்று சந்தித்தார் இளையராஜா.
அப்போதே, ”இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.