ADVERTISEMENT

பிளாஸ்டிக் தடையை மீறும் கடைகளுக்கு சீல்: தமிழக அரசு!

Published On:

| By admin

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் இன்று(மார்ச் 21) நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 36 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சோதனையில் சிறு வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக கூறினாலும், பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

ADVERTISEMENT

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share