ரேஷன் கடை ஊழியர்களின் போராட்ட எதிரொலி: அகவிலைப்படியை உயர்த்திய தமிழக அரசு!

Published On:

| By admin

ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடைகளுக்குத் தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த வாரம் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்துக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.

1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிவுடன் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share