நீர்நிலை ஆக்கிரமிப்பு: மூன்று குழுக்கள் அமைப்பு!

Published On:

| By admin

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குழு அமைத்து மீட்க வேண்டும் என்றும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க மாநில, மாவட்ட, கோட்டம் என மூன்று வகையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், டிஜிபி,சென்னை மாநகராட்சி ஆணையர், ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், நெடுஞ்சாலை துறை தலைவர், நில அளவு இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர பகுதிகளில் மாநகர காவல் ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்டல அளவிலான கண்காணிப்பு குழுவில், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் கணக்கெடுப்பு பிரிவு ஆய்வாளர், உதவி கோட்ட பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இம்மூன்று குழுக்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்காணிப்பது, நீதிமன்ற உத்தரவுகளை கண்காணித்து மதிப்பாய்வு செய்யும். இக்குழுக்கள் மாதம் ஒரு முறை கூடி ஆலோசனை மேற்கொண்டு, பல்வேறு பரிந்துரைகளை அரசிற்கு வழங்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

**-வினிதா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share