ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு!

Published On:

| By christopher

tn govt filed plea against governor rn ravi

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்சர் ரகுபதி முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்படி, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா,

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா,

தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா,

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்ட திருத்த மசோதா,

தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்ட மசோதா என பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு இன்னும் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தான் மசோதாக்களை கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், ”தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார்.  ஆளுநர் கிடப்பில் போடுவதால் அரசு பணிகள் முடங்கியுள்ளன.

சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.

ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு உச்சபட்ச கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆப்கான் வீரர் ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கினாரா ரத்தன் டாடா?

53 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share