இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் வெடித்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் இடையே தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கும் காசாவை ஹமாஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள இஸ்ரேல், தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டி வருகிறது.
போர் தாக்குதல் தொடங்கியது!
இந்த நிலையில் இன்று காலை முதல் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை நோக்கி தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது இஸ்ரேலும் போர் தாக்குதலை தொடுத்து வருகிறது.
காசா பகுதியில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேலின் விமானப்படை நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 198 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள மிடில்ஈஸ்ட்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள்!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தற்போது நிலவி வரும் போர் சூழலை அடுத்து இஸ்ரேலில் உள்ள ஏராளமான வெளிநாட்டினர் அச்சத்தில் உள்ளனர்.
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இஸ்ரேயலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, யாரும் தற்போது வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவிறுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் தற்போது மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தியுள்ளன.
அதன்படி, இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றித் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இஸ்ரேலில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் அயலகத் தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டனர். 15 தமிழர்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” எனத் தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு!
மேலும் இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை
+91-87602 48625,
+91-99402 56444
+91-96000 23645
மேலும் nrtchennai@tn.gov.in மற்றும் nrtchennai@gmail.com என்ற இணையதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…