தமிழக அரசின் துணை வேந்தர்கள் தேடுதல் குழு.. மீண்டும் ‘பஞ்சாயத்தை’ கூட்டிய ஆளுநர் ரவி

Published On:

| By Mathi

RN Ravi Stalin

தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட ‘நீண்ட’ செய்திக் குறிப்பு: பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயர்களைப் பரிந்துரைப்பதற்காக தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அதாவது யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யுஜிசி பிரதிநிதி இல்லாத, தேர்வுக் குழு பரிந்துரைக்கும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்தந்த மாநில பல்கலைக்கழகச் சட்டங்களின் கீழ், தமிழக ஆளுநர்- மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் செயல்படுகிறார். வரலாற்று ரீதியாக, சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலிலிருந்து வேந்தரால் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழக அரசு ‘2025-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டம் எண். 16-ன் மூலம் பல்கலைக்கழகச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து, ‘வேந்தர்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘அரசு’ என்ற வார்த்தையை மாற்றியது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடமிருந்து பறித்து அரசிடம் ஒப்படைக்கும் அந்தச் சட்டப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் UGC பிரதிநிதி இல்லாமல் இந்தத் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் செயல்படுவது கவலையளிக்கும் விஷயமாகும்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், தேர்வுக் குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டித்தும், துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய பெயர்களை வழங்க 21.03.2026 வரை கூடுதல் கால அவகாசம் அளித்தும் 22.12.2025 அன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக அரசால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுக்கள், துணைவேந்தர் தேர்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுடன் முறையே 24.01.2026 மற்றும் 27.01.2026 ஆகிய தேதிகளில் நேர்காணல்களை நடத்தியுள்ளன.

இந்த நடவடிக்கைகளும் செல்லாததாகும் வாய்ப்புகள் உள்ளன.

ஆகையால் யுஜிசி (UGC) பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, துணைவேந்தர்களின் தேர்வு மற்றும் நியமனத்திற்கான இத்தகைய தேர்வுக் குழுக்களின் செயல்பாடு மற்றும் தற்போது நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share