Elephant killed two women in Hosur
தேன்கனிக்கோட்டை அருகே இரண்டு பெண்களைக் கொன்ற ஒற்றை யானையைப் பிடிக்க தமிழக – கர்நாடக மாநில வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதியில் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து சென்று இரவு நேரங்களில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது.
இந்த யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு இடம்பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநில வனப்பகுதியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை, ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டைக்கு இடம்பெயர்ந்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, விளைநிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
அந்த ஒற்றை யானை இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு பசு மாடுகளை மிதித்து கொன்றது. அதேபோல் இருவரைத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மனிதர்களையும், கால்நடையையும் கொன்ற ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் நான்கு குழுக்கள் அமைத்து யானையை டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒற்றை யானை வனத்துறையினர் கண்ணில்படாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்ததால், கர்நாடக மாநில வனத்துறையினருடன் இணைந்து தமிழக – கர்நாடக மாநில இடையில் உள்ள வனப்பகுதியில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரிகள், “பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையைப் பிடிக்க நான்கு குழு அமைத்து தேடி வருகிறோம். ஆனால் யானை தேவர்பெட்டா வனப்பகுதிக்குள் சென்று இருக்க வாய்ப்புள்ளது.
இதனால் தமிழக வனத்துறையினர் 20 பேர், அதேபோல் கர்நாடக மாநில வனத்துறையை சேர்ந்த மூன்று வனசரகர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் மற்றும் கால்நடை மருத்துவர் உதவியுடன் தமிழக – கர்நாடக மாநிலத்தின் இடையில் உள்ள கும்பளாபுரம், மேலக்கரை மற்றும் கர்நாடக மாநிலம் சிந்தல்வாடி ஆகிய பகுதிகளில் யானை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து, தேடும் பணியில் ஈடுபட்டோம்.
யானையின் நடமாட்டம் தெரிந்துகொள்ள இரு மாநில வனத்துறையினர் சேர்ந்து வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளோம். யானை தென்பட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்” என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
வறுமை ஒழிப்புக்கு ரூ.25,922 கோடி: பட்ஜெட்டில் புது திட்டம்!
தமிழக பட்ஜெட்: திமுக கூட்டணிக் கட்சிகள் பாராட்டு!