ராஜன் குறை Stalin Upholding Democracy
இந்தியக் குடியரசு தோன்றி எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், அது முக்கியமான ஒரு வரலாற்றுத் தருணத்தை சந்திக்கிறது. அது என்னவென்றால் மாநிலங்கள் குடியரசின் அரசியல் அதிகாரத்தில் தங்கள் பங்கினை வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவம் முதிர்ச்சி பெறும் தருணமாகும். மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முக்கிய இந்திய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் இந்தத் தருணத்தில் முக்கிய முன்னெடுப்பை செய்துள்ளது. சென்னையில் மார்ச் 22-ம் தேதி நிகழ்ந்த தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் மூலம் முதல்வர் ஸ்டாலின் கூட்டாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடித்து மக்களாட்சியை மாண்புறச் செய்ய முன்வந்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளது. Stalin Upholding Democracy
புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2023-ம் ஆண்டு திறக்கப்பட்ட தருணத்திலிருந்தே அதில் மக்களவைக்கான அரங்கில் கூடுதல் இருக்கைகளுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விகள் துவங்கிவிட்டன. அதாவது தற்போதுள்ள 543 உறுப்பினர்களுக்கு ஏற்றபடி இருக்கைகள் அமைக்காமல், 888 பேர் அமரும்படி அரங்கு அமைக்கப்பட்டது. மக்கள் தொகை கடந்த ஐம்பதாண்டுகளில் அதிகரித்திருப்பதால் இந்த மக்களவையின் இருக்கை அதிகரிப்பு உணர்த்தும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டுமா என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை பரிசீலிக்கும் முன்பு இது குறித்து அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, இதுவரையிலான நடைமுறை என்னவென்பதை பார்த்துவிடுவோம். Stalin Upholding Democracy
இந்திய அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டபோது அதில் ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின்பும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கூடியவரை ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த மாநிலங்களிலிருந்து மக்களவைக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும்படி தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பிறகும், ஒரு தொகுதி மறுவரைவுக் குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்றத் தொகுதிகள் கூட்டவும், மாற்றியமைக்கவும் செய்யப்பட்டன.
இந்த நடைமுறையில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. என்னவென்றால் இந்தியாவின் மக்கள் தொகை மிக வேகமாக அதிகரிப்பது பெரும் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்பதால், குடும்பக் கட்டுப்பாடு குறித்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால் போதும் என்ற கணக்கீட்டில் “நாமிருவர், நமக்கிருவர்” என்ற முழக்கம் பிரசாரம் செய்யப்பட்டது. இப்படி நடந்தால் மக்கள் தொகை அதிகரிப்பு கட்டுக்குள் வரும் என்பதே காரணம். கல்வியைப் பரவலாக்குவதில் முன்னின்ற மாநிலங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது தொகுதி மறுவரையரையில் அந்த மாநிலங்களுக்கான மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறையும் சூழல் உருவானது. தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 41-ல் இருந்து 39 ஆகக் குறைந்தது. Stalin Upholding Democracy

அப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. ஒரு மாநிலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால், அதன் மக்களவை உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்துவிடும் ஆபத்து உருவானது. மக்களவையில் தங்கள் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஊக்குவித்தால் நாடு பெரும் சிக்கலை சந்திக்கும் என்பது உணரப்பட்டது. அதனால், 1971 சென்சஸ் கணக்கின்படி அமைந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரமே அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் போதுமானது என்று 1976-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது ஒன்றிய ஆட்சி இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது.
இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் தொகுதி மறுவரைக் கேள்வி 2001-ம் ஆண்டு எழுந்தபோது, வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்தது. அதில் தி.மு.க அங்கம் வகித்து வந்தது. அதற்குள் மாநிலங்களின் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு பெருமளவு அதிகரித்து விட்டது. தென் மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் முன் நிற்கத் துவங்கிவிட்டன. அந்த நிலையில் தொகுதி மறுவரையறை செய்யலாம், ஆனால் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, மாநிலங்களுக்கான பிரதிநிதிகள் விகிதாசாரம் ஆகியவை 1971 சென்சஸ்படியே மேலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதன்படியே தொகுதி மறுவரைக் குழு அமைக்கப்பட்டு தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டன. Stalin Upholding Democracy

கடந்த ஐம்பதாண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து விட்டது என்பது உண்மைதான். ஐம்பத்து நான்கு கோடி என்பது நூற்று நாற்பத்தாறு கோடி என்றாகிவிட்டது. அப்படியே அதற்கேற்றாற்போல அதிகரிப்பது என்றால் 1500 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவையில் அர்த்தபூர்வமான எந்த விவாதமும் நிகழ முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
அது மட்டுமன்றி, மாநிலங்களுக்கிடையிலான பிரதிநிதிகளின் விகிதாசாரம் மாறினால், மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களின் எண்ணிக்கை நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு போதுமானதாக மாறிவிடும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து ஒன்றியத்தில் அவை அதிகாரத்தைப் பகிரும் சாத்தியமற்றுப் போய்விடும். இது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தியதற்காக அரசியலில் முக்கியத்துவம் இழக்கும் முரண்பட்ட நிலையை உருவாக்கிவிடும் என்பதே பேராபத்து. Stalin Upholding Democracy
அதனால் கூட்டு நடவடிக்கைக் குழு, 2001-ம் ஆண்டு செய்ததைப்போலவே அரசியல் சட்ட திருத்தம் செய்து மேலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு இதே எண்ணிக்கையையும், விகிதாசாரத்தையும் உறுதி செய்துவிட்டு தொகுதிகளின் எல்லைகளை வேண்டுமானால் மாற்றியமைக்கலாம் என்று கூறுகிறது. அப்படியே மொத்த எண்ணிக்கையை அதிகரித்தாலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் மாறக்கூடாது என்பதும் அனைவரது கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மக்களாட்சி மாண்புற அதிகாரப் பரவலே வழி! Stalin Upholding Democracy
மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம் வெகுமக்கள் இறையாண்மை என்பதாகும். இதனை “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற சொற்றொடரால் குறிப்பது வழக்கம். அதன்படி மக்கள் தங்களையே ஆண்டுகொள்ள பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பிரதிநிதியையல்ல, ஒவ்வொரு குடிநபரும் மூன்று பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது முக்கியம். உள்ளாட்சி அமைப்பிற்கான பிரதிநிதி, மாநில அரசுக்கான பிரதிநிதி, ஒன்றிய அரசுக்கான பிரதிநிதி என மூன்று பிரதிநிதிகளை ஒவ்வொரு குடிநபரும் தேர்ந்தெடுக்கிறார். இதன் பொருள் என்னவென்றால் வெகுமக்கள் இறையாண்மை மூன்று அடுக்குகளில் பரவலாக்கப்படுகிறது என்பதுதான். Stalin Upholding Democracy
இந்திய அரசமைப்பு சட்டம் குடியரசை “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்றுதான் கூறுகிறது. இதில் அரசு என்று குறிக்கப்படுவது மாநில அரசுதான். ஒன்றிய அரசாங்கம்தான் (Union Government) இருக்கிறது; ஒற்றை அரசு (Unitary State) இல்லை. முக்கியமான அம்சங்களான நிலம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில அரசுகளின் ஆட்சி அதிகாரத்தில்தான் உள்ளன. அதனால் இறையாண்மை பகிரப்படும் மூன்று அடுக்குகளில் மாநில அரசுகளே மையமான அடுக்காக அமைந்துள்ளது எனலாம். ஆனாலும்கூட இந்திய ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் தேவைக்கதிகமாக குவிந்துவிட்டன.
இதற்குக் காரணம் இந்திய அரசமைப்பு எழுதப்பட்டபோது வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்கும் (Universal Adult Fracnchise) ஒரு தேர்தல்கூட நடந்திருக்கவில்லை. அரசமைப்பு வரைவு மன்றமும் (Constitutional Assembly) அனைத்து குடிநபர்களாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அத்தகைய சூழ்நிலை ஒன்றிய அரசிடம் பொருளாதார மேலாண்மைக்கான அதிகாரங்கள் குவிந்துவிட வகை செய்துவிட்டது. ஆட்சி மொழி என்ற முக்கிய பிரச்சினையிலும் வட மாநிலங்களின் பெரும்பான்மைவாதம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனாலும் புதியதொரு குடியரசைத் தோற்றுவிக்கும் தேசிய உணர்ச்சியின் காரணமாக பல சமரசங்களுடன் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் குடிநபர் அனைவரும் வாக்களிக்கும் தேர்தல்கள் மூலம் பதினெட்டு முறை நாடாளுமன்றம் அமைந்துள்ளது. மாநில சட்டமன்றங்களுக்கும் அதே போல கூடக் குறைய தேர்தல்கள் நடந்துள்ளன. இந்த நடைமுறைகளால் மக்கள் மக்களாட்சி வழிமுறைகளில் நன்கு முதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக மொழிவாரி மாநிலங்களில் அவரவர் மொழி சார்ந்த பொதுமன்றம் வலுப்பெற்று இயங்குவதால், மாநிலங்களே முரணரசியல் களமாக உள்ளன. அதனால் அவையே வரலாற்றின் களமாகவும் உள்ளன.
ஒவ்வொரு மாநிலமும் தனக்கேயுரிய விதத்தில் வரலாற்றுப் பாத்திரங்களாக உருவானதில், மாநிலக் கட்சிகளும், மாநில அரசியலும் இந்தியக் குடியரசின் தனித்துவமிக்க அங்கங்களாக மாறியுள்ளன. தேசியக் கட்சிகளாக தங்களைக் கூறிக்கொள்பவைகூட அந்தந்த மாநில அரசியலின் அடிப்படையில்தான் இயங்குகின்றன என்பதே நிதர்சனம். அசாம் மாநில பாஜக-வும், குஜராத் மாநில பாஜக-வும் ஒன்றல்ல. காங்கிரஸ் சி.பி.ஐ.எம் கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டணியில் இருக்கும். கேரளாவில் எதிர்க்கட்சியாக இருக்கும்.
இந்த நிலையில் ஒன்றியத்தில் அதிகாரங்களைக் குவிப்பதைக் கைவிட்டு மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தருவதும், நிதி மேலாண்மையில் மாநில அரசுகளின் பங்கினை வலுப்படுத்துவதும் இன்றியமையாத தேவையாகும். வட மாநிலங்களில் மட்டும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் பாஜக, தங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களை பாரபட்சமாக நடத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. அதே சமயம், தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லாததால் தன்னை ஆதரிக்கும் மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பதும் காணக்கூடியதாக இருக்கிறது. இது போன்ற போக்குகள் கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்தி குடியரசின் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் அபாயம் அதிகம் என்பதை சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். Stalin Upholding Democracy
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை பகிர்ந்தளித்தால், அவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க இயலும். அப்போதுதான் வெகுமக்கள் இறையாண்மை என்ற மக்களாட்சி அடிப்படை மாண்புறும். இந்த உண்மையை வலியுறுத்திதான் முதல்வர் ஸ்டாலின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் மணிப்பூர் உதாரணத்தை சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். மணிப்பூரில் பெரும் கலவரம் வெடித்து மக்கள் மாண்டாலும், நாடாளுமன்றத்தில் அதைக்குறித்து விவாதிக்கக்கூட மணிப்பூர் மாநிலத்திலும், ஒன்றியத்திலும் ஆட்சி செய்யும் பாஜக மறுத்துவிட்டதை நினைவில் கொள்ள வேண்டும். Stalin Upholding Democracy

நாடாளுமன்றம் சிறப்புற இயங்க என்ன செய்ய வேண்டும்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் வாழிடப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை. அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மக்களின் சட்டம், ஒழுங்கு, கல்வி, சுகாதார பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை. அதற்கு மாநில அரசுகள் உள்ளன. நாடாளுமன்றம் ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள்கைகள், நிதி மேலாண்மை, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய அம்சங்களைத்தான் விவாதிக்கப் போகிறது. அதற்கு இன்றுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையே போதுமானது. அவர்களுக்கே விவாதிக்க போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை. Stalin Upholding Democracy
ஐந்நூறு பேருக்கு பதிலாக ஆயிரம் பேர் பிரதிநிதிகளானால் மட்டும் மக்கள் பிரச்சினைகளைத் திறம்பட பேசிவிட முடியாது. குழப்பம்தான் அதிகரிக்கும். அதற்குப் பதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினைகளை விவாதிக்க முன்வருவதும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளிப்பதும்தான் முக்கியம். நாடாளுமன்ற பெரும்பான்மை என்பது அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பதாக இருக்க வேண்டும். மக்கள் தொகை அதிகமாக உள்ள ஒரு சில மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றால் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று ஆட்சியமைக்கலாம் என்ற நிலை பிற மாநிலங்களை அந்த மாநிலங்களின் காலனிகளாக மாற்றிவிடும் அபாயம் உண்டு. Stalin Upholding Democracy
இந்தியக் குடியரசின் எதிர்கால வளர்ச்சி என்பது இந்திய மக்களாட்சியின் தனிப்பெரும் ஆளுமையாகிய கலைஞர் வலியுறுத்திய “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற தத்துவத்தில்தான் அடங்கியுள்ளது. அதனை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டியது அவசியமில்லை என்பதே உண்மை. மாறாக ஒன்றியத்தில் குவிந்துள்ள அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். குறிப்பாக மாநிலத்தின் நிதி வருவாயைப் பெருக்கி, அதன் பொருளாதார உற்பத்திக்கு உகந்த வகையில் அதன் நிதி மேலாண்மை அதிகாரங்களை வடிவமைக்க வேண்டும். ஒன்றிய மாநில உறவு என்பது பேர ரசர்-சிற்றரசர் உறவு போல இருக்கக் கூடாது. ஏனெனில் மக்களாட்சியில் மக்களே அரசர்கள்.
அந்த வகையில் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக இந்தியக் குடியரசை ஒரு நெடுஞ்சாலைச் சந்திப்பில் நிறுத்தியுள்ளது. ஒற்றை அரசில் அதிகாரத்தைக் குவிக்கும் பாசிசப் பாதையா அல்லது அதிகாரப் பகிர்வை அனைத்து மட்டங்களிலும் சாத்தியமாக்கும் பன்மைத்துவ கூட்டாட்சிப் பாதையா என்பது குடியரசின் முன்னாலுள்ள கேள்வி.

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்பு பன்மைத்துவக் கூட்டாட்சிப் பாதையில் செல்ல அறைகூவல் விடுத்துள்ளது. தேசிய கட்சிகளைச் சார்ந்த தெலங்கானா, கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வரும், சி.பி.ஐ.எம் கட்சியின் கேரள முதல்வரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது இந்திய மாநிலங்கள் பெற்றுள்ள வரலாற்றுத் தன்னுணர்வை பறைசாற்றுகிறது. பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே இந்த தேசத்தின் நலனை, வளர்ச்சியை விரும்பினால், அது தேசப்பற்று கொண்டிருந்தால் இந்த அறைகூவலின் அறத்தைப் புரிந்துகொண்டு செயல்படும். தன் பெரும்பான்மைவாத மனோபாவத்தை கைவிட்டு, மக்களாட்சியின் மாண்பினை ஏற்கும். தெற்கில் உதிக்கும் சூரியன் தேசத்திற்கு ஒளிதரும். Stalin Upholding Democracy
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com