விஜய் தலைமயிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார். அவரது உரையில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் : தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றால் தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்நாடு என்றும் இருமொழிக் கொள்கையையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடர்ந்து பின்பற்றும்.
மேலும், மும்மொழிக் கொள்கையைக் காரணம்காட்டித் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தக் கூடாது . இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக நிதி வழங்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீட் விலக்கு மற்றும் மாநிலப் பட்டியல் கோரிக்கை
கல்வித் துறையில் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளையும் ஆளுநர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்:
தமிழக மாணவர்களின் நலன் கருதி ‘நீட்’ தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட வேண்டும். கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நீண்ட நாட்களாகக் காலியாகக் கிடக்கும் பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் முழுமையாக நிரப்பப்படும்
