தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்று, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
புதிய அரசு பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஆளுநருக்குச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
இன்று காலை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காகச் சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் ஆளுநருக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, காவல்துறை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், சபாநாயகர் மற்றும் அவை முன்னவருடன் பேரவை மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
சபாநாயகர், முதலமைச்சருக்கும் போலீஸ் மரியாதை
முன்னதாக, சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று காலை தனித்தனியே வருகை தந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோருக்கும் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னரே அவர்கள் இருவரும் தங்களது அறைகளுக்குச் சென்றனர்.
முன்னதாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டி, எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சட்டப் பேரவை வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
