தமிழகத்தில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை நிகழ்த்த உள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வளாகத்தில் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“வாயைத் திறங்க சி.எம்” – திமுகவின் நூதன எதிர்ப்பு
தமிழகத்தில் கடந்த மே 13-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு மாத காலத்தில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவிதமான விளக்கமோ, பதிலோ அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்கு “வாயைத் திறங்க சி.எம்” என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு பேட்ஜ்களை அணிந்து வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
“திரையில் நாயகன், தரையில் வில்லன்” – பேரவை வளாகத்தில் எதிரொலித்த முழக்கங்கள்
கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததோடு மட்டுமன்றி, சட்டமன்ற வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி புதிய அரசுக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில்:
- வாயைத் திறங்க CM
- கதறல் கேட்குதா CM?
- சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
- ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
- மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
- திரையில் நாயகன்.. தரையில் வில்லன்
- திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
- தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
- தூய சக்தி அல்ல துயர சக்தி
ஆகிய பதாகைகளை ஏந்தியபடியும் ”எங்கே போச்சு? எங்கே போச்சு? சட்டம் ஒழுங்கு எங்கே போச்சு” என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பியும் சட்டசபைக்கு வருகை தந்தனர் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
.
