தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-ஆம் கூட்டத்தொடரில் இன்று,(ஜூன் 19) மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், 17-ஆவது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை நேற்று (ஜூன் 18) நடந்து முடிந்தது. அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஜூன் 19, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 3 நாட்களிலும் வினா – விடை நேரம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் இராமசுவாமி, தா. வீராசாமி, சி. சுவாமிநாதன், அ.க. ஆறுமுகம், பெ. கண்ணன், அ. நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. ராமசுவாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, கே. ராஜன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
