TN Assembly: அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர்கள் மீதான தடையை நீக்கி சபாநாயகர் அழைப்பு விடுத்தார். எனினும் அந்த அழைப்பை அதிமுக நிராகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 130க்கு மேற்பட்டோரில், இதுவரை சுமார் 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாம் நாள் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது, கறுப்பு உடையில் வந்த அதிமுகவினர் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக பதாகைகளுடன் கோஷம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களையும் இன்று ஒருநாள் அவை நடவடிக்கையில் கலந்துக்கொள்ள தடைவிதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து குண்டுகட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி சம்பவம் என் கவனத்திற்கு வந்ததும், நடவடிக்கை எடுத்துள்ளேன். அதிமுகவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து பேரவை விதிகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், ”இன்று காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தடையை நீக்கி, அவர்களை மீண்டும் அவையில் அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும்” என்று என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தண்டனையை ரத்து செய்த சபாநாயகர், அனைவரும் மீண்டும் பேரவைக்குள் வர அழைப்பு விடுத்தார்.
எனினும் அந்த அழைப்பை ஏற்க மறுத்து அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் சட்டமன்றத்தில் பேசி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சட்டென உச்சம் தொட்ட தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?
கள்ளக்குறிச்சி… சிதைந்த கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள்! தேவை தொலைநோக்குத் திட்டம்!