திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

election commission

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி, அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையே, சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆளும் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அதன்படி, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் பின்னர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, முறைப்படி உடனடியாக தவெக கட்சியில் இணைந்தனர். இதன் காரணமாக இந்த 4 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் காலியாக உள்ள இந்த 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ்., திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கும் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இடைத்தேர்தலுக்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் வரும் ஜூன் 22ஆம் தேதிக்குள் முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 தொகுதிகளுக்குமான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share