சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்  மா.சுப்பிரமணியன்

Published On:

| By Minnambalam

சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆய்வுக்கூட்டம் மற்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். 

முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “2008ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்டது. அப்போதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் இந்தியாவுக்கு வழிகாட்டி அமைப்பாக இருந்தது.
கொரோனாவால் இந்தியா முழுவதும் இந்தப் பணி தொய்வடைந்தாலும், தமிழக முதல்வர் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும். கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் இன்று (ஜூலை 31) வரை 13 கொடையாளர்கள் 50 உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இந்த அரசு, பொறுப்பு ஏற்ற மே 2021 முதல் ஜூலை 2022 வரை உறுப்பு கொடையாளர்கள் 114 பேராக உள்ளனர். 479 உறுப்புகள் இதனால் பயன்பெற்றுள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14 மாதத்தில் மட்டும் 588 பேர் பயன்பெற்றுள்ளனர். 588 பேருக்கு உறுப்பு மாற்று பல வகைகளில் உதவியாக இருந்துள்ளது.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும், ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து 6 பேர் பலனடைந்துள்ளனர். சிறுநீரகத்திற்காக விண்ணப்பித்து காத்திருப்போர் 6,483, ஈரலுக்காக 380 பேர், இதயம் 43 பேர், நுரையீரல் 42 பேர், கணையம் 2 பேர், கைகள் வேண்டி 23 பேர் காத்திருந்து வருகின்றனர். 

தமிழகம் உறுப்பு தானத்தில் முன்னிலையில் இருந்தாலும் தேவைகள் அதிக அளவில் உள்ளது. 80 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை.கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு குரங்கம்மை இல்லை என்பது தெரியவந்தது.
கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள். கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பாதிப்புகள் இருந்தால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பாதிப்பு வராது எனவும் சொல்ல முடியாது. குரங்கம்மை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் நம்மிடமே உள்ளது. இதுவரை குரங்கம்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் புனேவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டு, இங்கேயே பரிசோதிக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

தமிழகத்தில் மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் நிலை உள்ளது. இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தற்போது வரை பூஸ்டர் தடுப்பூசியினை 37 லட்சத்து 33,957 பேர் செலுத்தி கொண்டனர். இது 9.63 சதவிகிதம். 33ஆவது மெகா தடுப்பூசி முகாம் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 50,000 இடங்களில் இது நடைபெற உள்ளது. 

சென்னையை தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 1) முதல் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. தமிழகத்தில் 4,308 காலி பணியிடங்களை நிரப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் 200 வகையிலான பணிகள் உள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

மக்களை தேடி மருத்துவத்தில் இதுவரை 82 லட்சத்து 43,875 பேர் பயனடைந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு 34 கோடியே 60 லட்சம் செலவில் கூடுதல் உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் உபகரணங்களுக்கு 36 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மையத்திற்கு 34 அரை லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் மரபியல் மருத்துவத்துக்கு மூன்று ஒப்புரவு மையங்கள் 2 கோடியே 73 லட்சத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 13 லட்சம் செலவில் டயாலிசிஸ் எந்திரம் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 53 லட்சம் செலவில் இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவசர சிகிச்சை மீட்பு மையம் அமைய உள்ளது” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

-ராஜ்

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share