வேறு எங்காவது சென்று விஷத்தை விதையுங்கள் என்று அமித் ஷாவிற்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் உள்ள பிர்பூமில் இன்று (ஏப்ரல் 14) பாஜக சார்பில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “2024 இல் பாஜகவுக்கு 35 இடங்களுக்கு மேல் கொடுத்து மோடியை மீண்டும் பிரதமராக்குங்கள். அப்படி நடந்தால் மம்தா பானர்ஜி அரசு 2025ஆம் ஆண்டுக்கு மேல் நீடிக்காது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்.
முதல்வர் மம்தா பானர்ஜி ஹிட்லர் போன்ற ஆட்சியை நடத்துகிறார். ராம நவமியை அமைதியாகக் கொண்டாட வங்காள மக்களுக்கு உரிமை இல்லையா? ஹவுரா மற்றும் ஹூக்ளியில் பாஜகவினரின் ராம நவமி பேரணிகள் தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.” என்று ஆக்ரோசமாக பேசியிருந்தார்.
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிஎம்சி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறுகையில், “அமித் ஷாவால் மட்டுமே இதுபோன்ற ஜனநாயகத்திற்கு விரோதமாக பேச முடியும். வங்காளத்தில் லோக்சபா தேர்தலில் 35 இடங்களை வென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு உள்துறை அமைச்சரால் எப்படி ஜனநாயகத்திற்கு எதிராக பேச முடிகிறது?” என்றார்.
மேலும் அவர், “2021ம் ஆண்டு பாஜக 200 சட்டமன்ற தொகுதிகளை இலக்காகக் கொண்டு அதை அடையத் தவறிவிட்டது. இன்று பிர்பூமில் நடைபெற்ற பாஜகவின் பேரணியும் தோல்வியடைந்து விட்டது. பேரணியில் பங்கேற்க வைப்பதற்காக பீகாரில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ராம நவமி வன்முறை பற்றி அமித் ஷா பேசுகிறார். ராம நவமி பேரணியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் பீகாரில் அங்குள்ள மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு தெரியாதா?” என்று கோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவை திணிக்க முயற்சி
அதே போன்று வாரிசு அரசியல் குறித்து பேசிய அமித்ஷாவிற்கு எதிராக டி.எம்.சி எம்.பியும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமித்ஷா , நீங்கள் எதிர்கொண்டிருக்கும் எதிர்ப்பை உணராமல் கற்பனையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். மேற்கு வங்கத்தில் பாஜகவை திணிக்க முயற்சிக்கிறீர்கள்.
எனது இருப்பு உங்களுக்கு இந்த அளவுக்கு வலியை ஏற்படுத்தினால், மேற்கு வங்க அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.1.15 லட்சம் கோடி நிதியை உரிய முறையில் விடுவியுங்கள். நான் அப்போதே அரசியல் களத்தில் இருந்து விலகி கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
வேறு எங்காவது செல்லுங்கள்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா பேசும்போது கூட்டம் வெறிச்சோடி கிடந்ததை புகைப்படமாக வெளியிட்டு விமர்சித்துள்ளது.

அதில், “வங்காளத்திற்கு ஒரு பருவகால பறவை வந்தது. ஆனால் யாரும் அதைப் பார்க்க விரும்பவில்லை! அமித்ஷா மீண்டும் டெல்லிக்குச் சென்று உங்கள் வேலையைச் செய்யுங்கள்.
பொய்கள் நிறைந்த உங்கள் குப்பைப் பேச்சையும், வெறுப்பு நிறைந்த உங்கள் நிகழ்ச்சி நிரலையும் காண வங்காளத்தில் உள்ள யாருக்கும் ஆர்வமில்லை.
வேறு எங்காவது சென்று விஷத்தை விதைக்க செல்லுங்கள்” என்று #AmitShahByeBye ஹேஷ்டேக்குடன் ட்விட் செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நாடாளுமன்ற தேர்தலுடன் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரும்: அமித் ஷா
சதம் விளாசிய சன்ரைசர்ஸ் வீரர்: கொல்கத்தா அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
