எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை பயன்படுத்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 16) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இந்த ஆண்டுக்கான ’சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்க டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், எம்.எஸ் சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “என் பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா கூறி வருகிறார்.

அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எனவே, சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வு, எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், சென்னையில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்ற மியூசிக் அகாடமி நிகழ்ச்சியில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எம்.எஸ் சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என் பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்.எஸ் சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில், “சுப்புலட்சுமிக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை கிருஷ்ணா பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட நபருக்கு அவரது பெயரில் விருது வழங்குவது எப்படி சரியாக இருக்கும்?
இது காந்தியை அவமதிக்கும் ஒருவருக்கு அவரது பெயரில் விருது வழங்குவதற்கு ஒப்பானது. அவருக்கு விருது வழங்கினால் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு முரணாக இருக்கும்” என்ற வாதம் முன்வைக்கப்படது.
டி.எம்.கிருஷ்ணா தரப்பில், “எம்.எஸ்.சுப்புலெட்சுமியை அவமதிக்கும் வகையில் பேசவில்லை. அவர் குறித்து நான் பேசிய கருத்துக்களின் அர்த்தம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் சுப்புலட்சுமியின் மிகப்பெரிய ரசிகன்” என்ற வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை டி.எம்.கிருஷ்ணா தன்னை சங்கீத கலாநிதி சுப்புலெட்சுமி விருது பெற்றவர் என்று பிரகனடப்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் விஜயபாஸ்கர்
வேதாந்தா, பாரதி ஏர்டெல், ராம்கோ, முத்தூட் : தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
Comments are closed.