ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் விவகாரத்தை பயன்படுத்தி பாஜக விஜய்யை இழுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருதாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9-ஆம் தேதி வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தவிர்க்க முடியாத சூழல்கள் காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எக்ஸ் பதிவில், மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள் என்று கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது. சிம்பு, ரவி மோகன் உள்ளிட்ட பல்வேறு திரை உலக பிரபலங்களுக்கு விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், “பாஜக ஒன்றிய அரசுக்கு உட்பட்ட அனைத்து துறைகளிலும் தலையிட்டு தங்களது எதிரிகளை மடக்க அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த ஒரு உண்மை. பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தணிக்கை குழு மூலம் செய்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக பாஜகவை விமர்சித்து இருக்கிறது. இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
