திருவண்ணாமலை தீப திருவிழா… போலி பாஸ் நடமாட்டம்? : பக்தர்களே உஷார்!

Published On:

| By Kavi

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு விஐபிகளுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள முதன்மையான முக்தி தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மலையில் ஏற்றப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தீபத்தை முன்னிட்டு சுமார் 50 லட்சம் பேர் திருவண்ணாமலைக்கு வந்து செல்வார்கள் என்பதால் போலீசாரும் பாதுகாப்பு முன்னேற்பாடு, பார்க்கிங் வசதி, போக்குவரத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை கோயிலில் 30 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய வகையில் இட வசதி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு 25,000 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்க கோயில் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கு 500 ,1000 ரூபாய் பாஸ்கள், விஐபி பாஸ்களுடன் வரக்கூடிய 12000 பேர் அனுமதிக்கப்படுவர்கள். இவர்களை தவிர, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 1,500 போலீசார், உபயதாரர்கள், தீபநாட்டார்கள், கட்டளைதாரர்கள், ஐயர்கள், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், சாமி தூக்குபவர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு பாஸ் அல்லாமல் பேட்ச் வழங்கப்படும்.

இந்தநிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலங்களில் போலி பாஸ்கள் புழக்கம் அதிகமாக இருந்ததால் கோயிலுக்குள் சென்றவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இந்த ஆண்டு இதுபோன்று நடைபெறாமல் இருப்பதற்காக கோயில் நிர்வாகத்தினரும், போலீசாரும் இணைந்து க்யூ ஆர் கோடு முறையில் பாஸ்களை தயாரித்துள்ளனர்.

இதன்மூலம் கோயிலுக்குள் செல்லும் போதும், வெளியில் வரும் போதும் க்யூ ஆர் கோடு ஸ்கேன் ஆகிவிடும். இதனால் ஒருமுறை கோயிலுக்குள் சென்று வெளியே வந்துவிட்டால் மீண்டும் உள்ளே செல்ல முடியாது.

இருந்தாலும் பணத்துக்காக சிலர் போலி பாஸ்கள் தயாரித்து விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இதுபோன்று போலி பாஸ்களோடு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே பாஸ் வாங்கும் போது அது கோயில் நிர்வாகத்தின் வ்ழிகாட்டுதலின் படிதான் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதுபோன்று விஐபிகளை அழைத்து வருதற்காக ஒரு எஸ்.பி. தலைமையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆகியோரை கொண்ட போலீஸ் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அம்மாணியம்மன் கோயில் வழியாக விஐபிகளை அழைத்துச் செல்ல தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வணங்காமுடி

ஆறு நாட்களில் ஆயிரம் கோடி : பிரபாஸ், ஷாரூக் பட வசூலை மிஞ்சிய புஷ்பா 2

ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share