திருவள்ளூர் காட்டுப்பள்ளி துறைமுகப் பகுதியில் போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக 29 வட இந்திய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பணிபுரிந்த வட இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு நேற்று (செப்டம்பர் 2) ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீசார் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் , 110 வட இந்திய தொழிலாளர்களிட ம் விசாரணை நடத்தினர். இவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
காட்டுப்பள்ளி துறைமுகம், L&T கப்பல் கட்டும் நிறுவனம், அனல் மின் நிலையம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அப்பகுதியில் தனி குடியிருப்புகளை ஏற்படுத்தி இவர்கள் தங்கி உள்ளனர்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பணிபுரிந்த, உ.பி.யைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் மது போதையில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அமரேஷ் பிரசாத்தை பணிக்கு அமர்த்திய ஒப்பந்த நிறுவனத்திடம் நட்ட ஈடு கோரி ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; தடியடி நடத்தினர்.
அப்போது போலீசார் மீது வட இந்திய தொழிலாளர்கள் சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தொடர்புடைய ஒப்பந்த நிறுவனம் ரூ.5 லட்சம் நட்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்டது. இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
