அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதமும் சென்று பார்வையிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூங்கில்தொழுவு பகுதியில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது.
இந்த தோப்பை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மூர்த்தி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். மூர்த்திக்கு தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
மகன்களுக்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், அடிதடி ஏற்படும் என்று அக்கம்பக்கத்து தோட்டத்துக்காரர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 5) இரவு மூவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.
இரவு சுமார் 10.30 மணியிலிருந்து அடித்து வெட்டி கொள்வது போன்ற சத்தம் கேட்டதால், பக்கத்து தோப்புக்காரர் போலீஸ் அவசர எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக 100க்கு தொடர்பு கொண்டால் சென்னையில் உள்ள தலைமையகத்துக்கு தான் புகார் போகும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

அதன்படி நேற்று சென்னை தலைமையகத்தில் இருந்து திருப்பூர் எஸ்.பி ஆபிஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சென்றது.
இதையடுத்து திருப்பூர் எஸ்.பி ஆபிஸ் கண்ட்ரோல் ரூமிலிருந்து குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, ‘இதுபோன்று அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் குடிபோதையில் மூன்று பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ சண்முகவேல், ஆயுதப்படை போலீஸ் அழகுராஜாவிடம் பேட்ரோல் வாகனத்தை எடுக்கச் சொல்லி சம்பவ இடத்துக்கு புறப்பட்டார்.
இருவரும் அந்த தோப்புக்கு சென்று பார்த்தபோது தந்தை, மகன்கள் மூன்று பேரும் கத்தியால் அடித்து வெட்டிக்கொண்டு இருந்தனர். இதில் மூர்த்திக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இதனால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டார் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல்.
உடனே இவர் வேறு யாருக்கோ தொடர்பு கொள்கிறார் என்று நினைத்து தங்கப்பாண்டியன், மணிகண்டன் இருவரும் எஸ்எஸ்ஐ சண்முகவேலை தாக்கி தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு வெட்டியுள்ளனர். அவர்களை தொடர்ந்து மூர்த்தியும் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல்.
இதைப் பார்த்த ஆயுதப்படை போலீஸ் அழகுராஜா, அங்கிருந்து தப்பியோடி குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வருவதற்கு முன்னதாகவே தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகியோர் தப்பியோடியுள்ளனர். மூர்த்தியை மட்டும் போலீசார் பிடித்துள்ளனர்.
உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் ஒருவர், அதுவும் காவல்துறை சீருடையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த தகவல் முதல்வர் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. காவல்துறை தலைமைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 6) காலை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் திருப்பூர் விரைந்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ளார். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதோடு சண்முகவேலின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
