மர்ம நபர்களால் நேற்றிரவு அரிவாளால் வெட்டப்பட்ட பத்திரிகையாளர் நேசபிரபு, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தன்னை நோட்டம் விடுவதாகவும், இதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் நேற்று இரவு காவல்துறை அதிகாரிக்கு செல்போனில் அழைத்து நேசபிரபு வலியுறுத்தியுள்ளார்.

அந்த ஆடியோவில் நேசபிரபு காவல்துறை அதிகாரியிடம் பேசும்போது,”சார், ஒரு டைம், இரண்டு டைம்னா பரவாயில்ல, வந்துக்கிட்டே இருக்கானுங்க. எத்தனை டைமுங்க சார் இவனுங்கள பார்க்குறது. நிம்மதியா தூங்க கூட முடியலங்க சார்.
கூட யாராச்சும் சப்போர்ட்டுக்கு இருந்தாங்கன்னா நானே இவனுங்கள புடுச்சிருவேன். என்னை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கானுங்க சார்.
நான் இப்போம் ஸ்ரீபதிக்கிட்ட நின்னுக்கிட்ருக்கேனுங்க சார். அவனுங்க இந்நேரம் பல்லடமே தாண்டி போயிருப்பானுங்க. நீங்க பல்லடம் போலீஸ்கிட்ட சொல்லி அவனுங்கள புடிக்க சொல்லுங்க சார்.
ஆனா, எனக்கு எது வேணும்னாலும் நடக்களாமுங்க சார். சார் வந்துட்டானுங்க…சார் வந்துட்டானுங்க… கொஞ்சம் வாங்க சார். இனோவா, எட்டிக்கா கார்ல அஞ்சு பேரு வந்துருக்கானுங்க சார்.
என் லைஃப் முடிஞ்சது சார்” என்று பதறியபடி நேசபிரபு பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 10 மணிக்கு மர்மநபர்கள் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கை, கால்களில் பலத்த காயமடைந்த நேசபிரபு, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் நேசபிரபு வெட்டப்பட்ட சம்பவத்திற்கு, திருப்பூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…









