வேலை தேடி வந்த வடமாநில இளம்பெண்: கணவர் கண் முன் நடந்த கொடூரம்!

Published On:

| By Minnambalam Desk

திருப்பூரில் வடமாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Tiruppur North Indian women

திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பனியன் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் சென்றால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வட மாநில தொழிலாளர்களுக்கு உள்ளது. அப்படி நாள்தோறும் ஏராளமான மக்கள் திருப்பூர், கோவை பகுதிக்கு வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் தனது கணவர் மற்றும் 3 வயது குழந்தையுடன் வேலைக்காக ரயில் மூலமாக கடந்த 17ம் தேதி கோவை தெக்கலூர் வந்துள்ளார். வேலை பிடிக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்ப மூவரும் நேற்று (பிப்ரவரி 18) திருப்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

ரயில் நிலையத்துக்கு அருகே நின்றுகொண்டு இருந்த மூவரிடமும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீஷ், டானீஷ், முர்சித் ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். தம்பதிக்கு வேலை வாங்கித் தருவதாகவும், தங்கள் பனியன் நிறுவனத்தில் வேலை உள்ளதாகவும் கூறியுள்ளனர். பின்னர், தாங்கள் தங்கி இருக்கும் லட்சுமி நகர் அறைக்கு மூவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

வேலை கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் சென்ற மூவருக்கும் அவர்களின் அறைக்குச் சென்றபோது அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆறு பேரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஒரே அறையில் உறங்கியுள்ளனர். அப்போது 3 வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டிய பீகார் இளைஞர்கள், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மூவரையும் அங்கிருந்து மிரட்டி வெளியே அனுப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர், குழந்தையுடன் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூவரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தியதில், உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, மூவரையும் கைது செய்து தொடர்ச்சியாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மூவர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் உயிர் பயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வட மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tiruppur North Indian women

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share