டிரம்ப் அரசு இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50% சுங்கவரி விதித்து 2 மாதங்கள் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டின் பின்னலாடை தொழிலின் மையமான திருப்பூர் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
தற்சமயம் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிகளில் 30% அமெரிக்கா நோக்கிச் செல்கிறது. அதேசமயம் வரி விதிப்பு காரணமாக ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கிடங்குகளில் தேங்கி உள்ளது. புதிய ஆர்டர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சிறு, குறுநிறுவனங்கள் (MSME) பெரும் சிரமத்தில் சிக்கியுள்ளன.
குறிப்பாக அமெரிக்க சந்தையை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் ஏற்றுமதியாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் தயாரித்த பொருட்களுக்கு அமெரிக்க வாடிக்கையாளர்கள் 20–25% வரை தள்ளுபடி கோருகின்றனர். பெரிய நிறுவனங்கள் சில இழப்புகளை தாங்கிக் கொள்ள முடிந்தாலும், MSME துறையினர் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஏனெனில் இந்த அளவிலான தள்ளுபடியை ஏற்கும் சாத்தியம் குறைவு.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) இணை செயலாளர் குமார் துரைசாமி நமது மின்னம்பலம்.காம்-மிடம் கூறுகையில், “அதிபர் டிரம்ப் உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் வரி விதிப்பை அறிவித்தார். அப்போது இந்தியாவிற்கு மிக குறைந்த அளவில் வரி விதிக்கப்பட்டதால் 25 ஆண்டுகாலம் உள்ள இந்தியாவுடனான நட்புறவு, பிரதமருடனான நல்லுறவு உள்ளிட்ட காரணங்களால் குறைவான வரி விதிக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் திடீரென இந்தியாவுக்கு ஆகஸ்ட்டில் 25 சதவிகிதம் வரி விதிப்பதாக அறிவித்தார். மீண்டும் குறுகிய காலத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.
முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது
திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளை பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 6 சதவிகிதம் முதல் அதிக பட்சம் 12 சதவிகிதம் வரை மட்டுமே நிகர லாபம் கிடைக்கும். முதல்கட்டமாக 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்ட நிலையில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே சமயம் போட்டி நாடுகளான வியட்நாம், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு 19 முதல் 20 சதவிகித வரிகள் விதிக்கப்பட்ட நிலையில் நமக்கு கூடுதலாக 6 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் சவாலான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் வர்த்தகத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்ததால் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையில் லாபத்தில் சிறிய பகுதியை குறைத்து வர்த்தகத்தை நம்பிக்கையோடு தொடர்ந்தோம்.
ஆனால் மீண்டும் 25 சதவிகித வரி உயர்த்தப்பட்டதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது ஒட்டு மொத்த பின்னலாடை துறையையே ஆட்டம் காண செய்துள்ளது. இதில் அமெரிக்காவின் இறக்குமதியாளர்களும் உடனடியாக மாற்று சந்தையை நோக்கி போக இயலாத சூழலும் நிலவுகிறது.
இதனால் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் இடையேயான நீண்டகால உறவு மற்றும் பொருளாதார வலுவின் அடிப்படையில் வர்த்தகம் நீடிக்கிறது. வரி விதிப்பு அறிமுகமான நிலையில் தயாராக இருந்த சரக்குகளை பொறுத்தவரை ஓரளவு நஷ்டம் அடைந்தாலும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் பட்சத்தில் பழைய வர்த்தகம் தொடரும் என ஏற்றுமதியாளர்கள் நம்பினர்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல் 2 மாதங்கள் நெருங்கும் இந்த நிமிடம் வரை வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதனால் ஏற்றுமதியாளர்களின் நம்பிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. மேலும் நாங்கள் இப்போது மாற்று சந்தைக்கு தேவையான அடிப்படை வேலைகளை தொடங்கி உள்ளோம் என்றார். ஆனால் இந்த வேலைகளை செய்ய குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை காலம் பிடிக்கும்.
அதிகபட்சம் இந்த 1 வருடம் வரை தாக்குபிடிக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் இருக்கும். தாக்குப்பிடிக்க முடியாத நிறுவனங்கள் தொழிலில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகும்.
இதற்கிடையில் மத்திய அரசு எங்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இதுபோன்ற வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் நிவாரணங்களை வழங்கி உள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இதுவரை எந்த சலுகைகளும் அறிவிக்கப்படாமல் உள்ளது. காலதாமதம் இல்லாமல் மத்திய அரசு உடனடியாக சலுகைகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்றார்.
வேலையிழப்பு அபாயம்
அமெரிக்க வேலைகள் இல்லாத போதும் இதுவரை திருப்பூர் நிறுவனங்கள் ஓரளவு தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்துள்ளன. ஆனால் அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பு நீடித்தால் முதல் கட்டமாக தொழிலாளர்களின் வேலை நேரம் குறைவும், அதைத்தொடர்ந்து வேலையிழப்பு அபாயமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார். அதேசமயம் மாற்று நாடுகளின் சந்தை மற்றும் உள்நாட்டு சந்தையை நோக்கி பல நிறுவனங்கள் திரும்பி வரும் சூழலில் அதிக அளவில் வேலையிழப்பு அபாயம் உடனடியாக வராது என்று நம்புவதாக கூறினார்.
எது எப்படி இருந்தாலும் உலக அளவில் 25 சதவிகித ஜிடிபியை தன்னகத்தே வைத்துள்ள அமெரிக்காவுடனான வர்த்தகத்தை ஈடு செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக 6 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை கால அவகாசம் கட்டாயம் வேண்டும் என்கிறார்.
2 மாதங்களுக்கு முன் இருந்த நம்பிக்கை இல்லை
சாய ஆலைகள் மூடல், கோவிட், ரஷ்யா உக்ரைன் போர் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்து வந்த திருப்பூர் நிறுவனங்களுக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய பின்னடைவுதான். ஆனால் இந்த பிரச்சனைகளில் இருந்தும் மீள்வோம்.. நிச்சயமாக பழைய நிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவிலும் டிரம்ப் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி வருவதால் சில பிடிவாதங்களை எல்லாம் அமெரிக்கா விட்டாக வேண்டிய நிலை உருவாகும். குடியரசுக் கட்சியில் டிரம்புக்கு ஆதரவாக இருந்தவர்களே அவருக்கு எதிராக திரும்பும் நிலை உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கு சாதகமான சமிஞ்சைகள் வந்தாலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்றார்.
