சமீபத்தில் சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை அறிவித்துவிட்டுச் சென்றார். Tiruppur admk cadre sad about alliance with bjp
இதனையடுத்து தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் என்.டி.ஏ கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதனையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுக நிர்வாகிகளே தங்களது அதிருப்தியை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும், இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும்” என்றார்.

அதே நிகழ்வில் நா தழுதழுக்க மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் பேசுகையில், ”கட்சியை உடைக்க பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் இயக்கம் செயல்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் உங்களை கைவிடாது. தைரியமாக இருங்கள்” என்று பேசினார்.
இதனையடுத்து கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், “அதிமுக – பாஜக கூட்டணி குறித்து யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரனின் திருப்பூர் தெற்கு தொகுதியிலும், கண்ணப்பனின் வார்டிலும் அதிகளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர் என்பதால் அவ்வாறு பேசினர்” என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.