திருப்பத்தூர்: கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை பிடிபட்டது!

Published On:

| By indhu

Tirupattur: Leopard trapped after many hours of struggle!

திருப்பத்தூரில் நேற்று பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் இன்று (ஜூன் 15) மயக்க மருந்து செலுத்தி பிடித்துள்ளனர்.

திருப்பத்தூரில் சாம நகர் பகுதியில் உள்ள ஜெயராமன் வீட்டின் அருகே நேற்று பிற்பகல் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர், இந்த பகுதிக்குள் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பில்லை, நீங்கள் காட்டு பூனையை பார்த்திருப்பீர்கள் எனக் கூறினர். ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் அந்த பகுதியில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு, திருப்பத்தூர், நாற்றம்பள்ளி, குடியாத்தம் பகுதிகளில் உள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயம்

வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பித்த சிறுத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது.

அங்கு, பள்ளியின் சுற்றுச்சுவருக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த கோபாலை நெற்றி மற்றும் காது பகுதியில் தாக்கிவிட்டு சிறுத்தை அங்கிருந்த மறைவான இடத்திற்குள் புகுந்தது.

சிறுத்தை தாக்கியதால் காயமடைந்த கோபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tirupattur: Leopard trapped after many hours of struggle!

மேலும், பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை இருப்பதால் மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம், கதவுகளை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் மாணவிகளை வகுப்பறையில் வைத்து பூட்டி பாதுகாத்தனர். அருகில் உள்ள பள்ளிகளுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது, திடீரென 10 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சிறுத்தை அருகில் இருந்த கார் நிறுத்தும் பகுதிக்குள் நுழைந்தது.

கார் நிறுத்தத்திற்குள் இருந்த ஆரோக்கியசாமி, தினகரன், இம்ரான், அஸ்கர் கான், வெங்கடேசன் ஆகிய 5 பேரும் சிறுத்தை அங்கு நுழைந்ததை கண்டதும் 2 காருக்குள் ஏறி கதவை அடைத்துக்கொண்டனர். அவர்கள் இருந்த கார்களுக்கு அருகில் சிறுத்தை பதுங்கி இருந்தது.

அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், சிறுத்தை பிடிபடவில்லை. 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காருக்குள் இருந்த 5 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 சிறுத்தை பிடிபட்டது

கார் நிறுத்தத்திற்குள் இருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திபிடிக்க ஓசூர் மற்றும் வேலூரில் இருந்து வனக்குழுவினர் வருகை தந்தனர். மேலும், கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை மண்டல வன பாதுகாவலர், கால்நடை மருத்துவர் கொண்ட குழுவினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதை பிடித்தனர்.

திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சிறுத்தை 3 வயதான ஆண் சிறுத்தை என்பது கண்டறியப்பட்டது.  சிறுத்தையை தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம், வெள்ளி விலை உயர்வு : எவ்வளவு தெரியுமா?

”எதிர்பார்ப்புகள் எப்போதும் பாரம்தான்” – விஜய் சேதுபதி ஓபன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share