திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை எழுப்பினார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி மீதும் சந்திரபாபு நாயுடு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தன் மீது சந்திரபாபு நாயுடு கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு இன்று (செப்டம்பர் 22) ஜெகன் மோகன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ஆந்திராவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழல்கள் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம், ஒருமைப்பாடு மற்றும் நற்பெயரை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையை கவனமாகக் கையாளவில்லை என்றால், பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். புதிய ஆந்திர அரசின் 100 நாட்கள் பெருமைகளைப் பற்றி பேச தெலுங்கு தேசம் கட்சி நினைத்தது. ஆனால், மக்களின் கருத்து மிகவும் எதிர்மறையாகவே உள்ளது.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆந்திர அரசு தோல்வியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் மாநிலத்திற்கு தேவையான நிதிகளை சரியாக ஒதுக்கவில்லை.
ஆந்திர மக்கள் சந்திரபாபு நாயுடுவின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் திருப்பதி தேவஸ்தானம் குறித்த பொய்களைப் பரப்புகிறார்.
திருப்பதி கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய்யாகும்.
மேலும் இந்த பொய்ப் பிரசாரம் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கும் சாத்தியம் உள்ளது.
இது முற்றிலும் பொய்யானது என்பதை அறிந்தும், மக்களின் மனதில் ஏற்படுத்தும் ஆழ்ந்த வலியைப் பொருட்படுத்தாமலும் சந்திரபாபு நாயுடு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தான விஷயங்களில் அரசு சிறிது அளவு கூட தலையிட முடியாது. தேவஸ்தானம் செய்யும் கொள்முதல்கள் அனைத்தும் ஈ டெண்டர் முறையில் நடைபெறுகிறது;
திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் அனைவரின் பார்வையும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் புண்பட்டு போயிருக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்” என ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இலங்கை அதிபர் தேர்தல் : விருப்ப வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?