திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான ’சிறப்பு புலனாய்வுக் குழு’ (எஸ்ஐடி) அமைக்க உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 4) உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், “லட்டுவில் கலப்படம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த பொதுக் கருத்துக்களை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், மத்திய அரசின் விசாரணையின் அவசியம் குறித்து பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”கலப்பட குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் திறமையானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள். எனினும் எஸ்ஐடியின் விசாரணையை மத்திய அரசு அதிகாரி ஒருவர் கண்காணிக்கலாம்” என்று மேத்தா பரிந்துரைத்தார்.
அப்போது திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவிடம், ”நீதிமன்ற உத்தரவுப்படி எந்த விசாரணைக்கும் ஆட்சேபனை இல்லை என்று ஆந்திர முதல்வர் செய்தித்தாள்களில் செய்தி வெளியிட்டது ஏன்?” என நீதிபதி கவாய் கேள்வி எழுப்பினார்.
அதற்கு லுத்ரா, ”தேவஸ்தான நிர்வாக அதிகாரியின் அறிக்கைகள் பற்றிய செய்திகள் கூட தவறாக வழிநடத்தலாம். எனவே நாளிதழ் செய்திகளைப் பார்க்க வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்தார்.
சுதந்திரமான விசாரணை?
அப்போது, ராஜ்யசபா எம்பியும், முன்னாள் டிடிடி தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சுதந்திரமான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவர், “முந்தைய அறிக்கைகளின் அடிப்படையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அமைக்கப்பட்ட மாநில எஸ்ஐடி சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது” என்று வாதிட்டார்.
அதற்கு ஆந்திரா மாநிலத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (என்டிடிபி) ஆய்வக அறிக்கை ஜூலை மாதம் மீண்டும் வந்ததாகவும், அதன் அடிப்படையில்தான் முதல்வர் செப்டம்பரில் அறிக்கை வெளியிட்டார் என்றும் கூறினார்.
“பன்றிக்கொழுப்பு பயன்படுத்தப்பட்டது அவருக்கு எப்படி தெரியும்?” என்று சிபல் பதிலுக்குக் கேட்டார். ஆய்வக அறிக்கை கூறியதாக ரோஹத்கி கூற, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபல், அந்த அறிக்கையில் காய்கறி கொழுப்புகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
அரசியல் நாடகமாக மாறுவதை விரும்பவில்லை!
இதனையடுத்து, “ மாநில எஸ்.ஐ.டிக்கு பதிலாக சுதந்திரமான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கலாம்” என்று நீதிபதி கவாய் பரிந்துரைத்தார். மேலும் ”இந்த விவகாரம் அரசியல் நாடகமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை, சுதந்திரமான அமைப்பு இருந்தால், மக்களுக்கு விசாரணை மீது நம்பிக்கை இருக்கும்” என்று நீதிபதி கவாய் கூறினார்.
தொடர்ந்து, சிபிஐ இயக்குநரால் பரிந்துரைக்கப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இரண்டு அதிகாரிகள், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் மூத்த அதிகாரி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
மேலும், எஸ்ஐடி விசாரணையை சிபிஐ இயக்குனரே கண்காணிப்பார் என்றும், திருமலை கோயில் தெய்வத்தின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை நிலைநிறுத்தவே இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும், நீதிமன்றத்தை ஒரு அரசியல் போர்க்களமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, டாக்டர்.சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் டிடிடி தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, சுரேஷ் சவாங்கே மற்றும் டாக்டர்.விக்ரம் சம்பத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
TN-Alert செயலி : என்னென்ன விவரங்களை பார்க்க முடியும்?
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த முக்கிய திட்டங்கள் : முழு விவரம்!