திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததை ஆய்வக அறிக்கை(Lab Report) உறுதி செய்துள்ளது என்று தெலுகு தேசக் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில்(2019-2024), திருப்பதி லட்டு செய்வதற்காக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தரமற்ற பொருட்கள் லட்டு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த காணொலியை ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ் நேற்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த மாநிலங்களவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி சுப்பா ரெட்டி, அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த அளவுக்கும் செல்வார் என்பதற்கு இதுதான் உதாரணம் என்று பதிலளித்திருந்தார்.
சந்திரபாபு நாயுடு வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், ஒரு உயர்மட்ட குழுவைக் கொண்டோ அல்லது சிபிஐயின் உதவியுடனோ இதை விசாரிக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா தனது எக்ஸ் தளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் தெலுகு தேசக் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி இன்று(செப்டம்பர் 19) மாலை 4 மணிக்கு இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று எக்ஸ் தளத்தில் இன்று மதியம் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், NDDB CALF ஆய்வகத்தின் அறிக்கையை வெளியிட்டார். அதில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தபட்ட நெய்யின் மாதிரி கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி NDDB CALF ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் ஜுலை மாதம் 17ஆம் தேதி கிடைத்த ஆய்வகத்தின் அறிக்கையில், ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நெய்யின் மாதிரியில் பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவை கலந்திருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடக பால் கூட்டமைப்பு இது குறித்துக் கூறுகையில் ‘ வழக்கமாகத் திருப்பதி தேவஸ்தானம் எங்களிடம் இருந்துதான் நெய் வாங்கும்.
ஆனால் கடந்த நான்காண்டுகளாக எங்களிடம் இருந்து அவர்கள் நெய் வாங்கவில்லை” என்று கூறியிருந்தது.
இதற்கிடையில் அகில் பாரதிய ஹிந்து மஹாசபாவின் தலைவர் சுவாமி சக்கரபானி மஹராஜ் “ சந்திர பாபு நாயுடு வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், இந்த குற்றச்சாட்டு தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் பக்தர்கள் சிலர் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களிடம் லட்டின் சுவை ஏன் மாறியுள்ளது என்று கேட்டபோது, நாங்கள் லட்டு தயாரிப்பதற்கான நெய்யைக் கர்நாடக பால் கூட்டமைப்பிலிருந்த வாங்குவதற்குப் பதிலாக, வேறு இடத்திலிருந்து வாங்குகிறோம் என்று தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

Comments are closed.