ADVERTISEMENT

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருப்பதி!

Published On:

| By Balaji

திருப்பதி ஏழுமலையான் கோயில், இங்கிலாந்தில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

தூய்மை மற்றும் பசுமைக்கு ஒரு பெரிய தளமாகவும், உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு சேவை செய்ததற்காகவும் திருப்பதி ஏழுமலையான் கோயில், இங்கிலாந்தில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த நிறுவனம் சார்பாக ஏழுமலையான் கோயிலுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி இந்திய பிரதிநிதிகள் மூலமாக பெற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள தேவஸ்தான அறங்காவலர் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, “திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உலகில் எங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்குப் பல்வேறு சேவைகளையும், வசதிகளையும் செய்து வருகிறது. சாதாரண நாளில் திருமலையில் 60,000 முதல் 70,000 பக்தர்கள் சிறிய சிரமம் கூட இல்லாமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தரிசன வரிசை மேலாண்மை நன்றாக நடக்கிறது. அன்னதானத் திட்ட சமையல் மேலாண்மை நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லட்டு பிரசாதங்கள் ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

நாள் ஒன்றுக்கு சுமார் 35,000 முதல் 45,000 பக்தர்கள் வரை கல்யாண கட்டாவில் சிறிதும் சிரமம் இல்லாமல் தலைமுடி காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை வீரர்கள் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சேவை செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருமலை தூய்மையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 28,851 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 13,705 பக்தர்கள் தலைமுடி காணிக்கை லுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 96 லட்சம் கிடைத்ததாக, கோயில் பரகாமணி சேவா குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share