மூன்று நாட்களுக்கு பிறகு நெல்லையில் ரயில் சேவைகள் இன்று (டிசம்பர் 20) மீண்டும் துவங்கியது.
தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பலத்த பாதிப்புகளை சந்தித்தன. குறிப்பாக ரயில் நிலைய தண்டவாளங்களில் மழை நீர் சூழ்ந்ததால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ற ரயிலானது ஸ்ரீவைகுண்டம் அருகே சென்றபோது தண்டவாளம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ரயிலில் பயணித்த 500 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கினர். இரண்டு நாட்களுக்கு பிறகு தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் நேற்று (டிசம்பர் 19) அவர்களை பத்திரமாக மீட்டனர்
இந்தநிலையில், ரயில் தண்டவாளங்களில் இருந்து வெள்ள நீர் அகற்றப்பட்ட நிலையில், நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி தாம்பரம் – செங்கோட்டை செல்லும் ரயில் இன்று வழக்கம் போல் இயக்கப்படும்.
நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 9.24, மாலை 6.15 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும்.
செங்கோட்டை – நெல்லை ரயில் காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர்மழை: 2024 வருட காலண்டர்கள் அனுப்புவதில் சிக்கல்!
